இயல் 1 கவிதைப்பேழை காலக்கணிதம்
இயற்றியவர் கண்ணதாசன்
நுழையும்முன்
மனிதம், தனி மனிதனுடைய, சமுதாயத்தினுடைய வாழ்வியல் நெறியின் தெளிந்த சாரம். மனிதம் என்பதன் இலக்கணமானவன் நல்ல கவிஞன். கவிமனம் எதைச் சரியென்று கருதுகிறதோ அதைத் துணிந்து சொல்லும்; செல்வத்திற்கோ பதவிக்கோ அடிபணியாது; பிறருக்குப் பகிர்ந்து கொடுக்கும்; மாற்றம் என்பது மனிதத்தின் இயல்பு. எதையும் மறைக்காமல் துணிந்து சொல்வதும் மனிதத்தின் இயல்பு. மனிதமும் கவித்துவமும் ஒன்றிணைந்த நிலையே இக்கவிதையின். சாரம்.

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!
செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!
பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்!
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூலங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!
- கண்ணதாசன்
நூல் வெளி
'காலக்கணிதம்' என்னும் இப்பாடப்பகுதி, கண்ணதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
முத்தையா' என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். இவரது பெற்றோர் சாத்தப்பன் விசாலாட்சி ஆவர். 1949ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, இவர் திரைப்படப் பாடலாசிரியரானார். திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன். இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்; தனது திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை (Philosophy) மக்களிடையே கொண்டு சேர்த்தவர்; சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய
அகாதெமி விருது பெற்றவர். இவர் தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராகவும் ஆக்கப்பட்டுச் சிறப்புப்பெற்றுள்ளார்.
கற்பவை கற்றபின்...
1. கவிதைகளை ஒப்பிட்டுக் கருத்துரைக்க.
கவிச்சக்கரவர்த்தியும் கவியரசும்
நதியின் பிழையன்று; நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று; மகன் பிழையன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்
- கம்பன்
நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை
விதிசெய்த குற்றம் அன்றி
வேறு- யாரம்மா!
- கண்ணதாசன்
2. கண்ணதாசனின் கவியரங்கக் கவிதையைச் சுவைத்து அது குறித்து உரையாற்றுக.
கதிர் வெடித்துப் பிழம்பு விழ
கடல் குதித்துச் சூடாற்ற
முதுமை மிகு நிலப் பிறப்பின்
முதற் பிறப்புத் தோன்றி விட
நதி வருமுன் மணல் தரு முன்
நலம் வளர்த்த தமிழணங்கே
பதி மதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கை பார்த்தவளே!
நின்னை யான் வணங்குவதும்
நீ என்னை வாழ்த்துவதும்
அன்னை மகற்கிடையே
அழகில்லை என்பதனால்
உன்னை வளர்த்து வரும்
ஒண் புகழ் சேர் தண் புலவர்
தன்னை வணங்குகின்றேன்
தமிழ்ப் புலவர் வாழியரோ!







0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.