12th Tamil Unit 2 Assignment Answer key - July 2021
- வகுப்பு:12
- பாடம்: பொதுத்தமிழ்
- இயல் -2 (பெய்யெனப் பெய்யும் மழை)
பகுதி - அ
ஒரு மதிப்பெண் வினா
1.பொருத்துக
அ ) குரங்குகள் - 1) கன்றுகளைத் தவிர்த்தன
ஆ)விலங்குகள் -2 மரங்களிலிருந்து வீழ்ந்தன
இ)பறவைகள் - 3) குளிரால் நடுங்கின
ஈ ) பசுக்கள் - 4 ) மேய்ச்சலை மறந்தன
அ) 1,3,4,2 ஆ) 3,1,4,2
இ) 3,4, 2, 1 ஈ)2,13,4
விடை : இ) 3 , 4 , 2 , 1
2. நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது
அ சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ) நீர்நிலைகள்
விடை : இ) மழைத்துளிகள்
3. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
அ ) பருவநிலை மாற்றம்
ஆ) மணல் அள்ளுதல்
இ ) பாறைகள் இல்லாமை
ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
விடை :ஆ ) மணல் அள்ளுதல்
4, பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தன - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
விடை : ஈ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
5. தமிழில் திணைப்பாகுபாடு ------ அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ பொருட்பெயர்
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
விடை : அ ) பொருட்பெயர்
6 ) ' உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே ' இந்நுற்பா இடம்பெற்ற இலக்கண நூல்......
அ) நன்னூல் ஆ) அகத்தியம்
இ)தொல்காப்பியம் ஈ ) இலக்கண விளக்கம்
விடை : இ ) தொல்காப்பியம்
7. யார்? எது? ஆகிய வினைச்சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே ----- -----
அ ஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவத்திணை, அஃறிணை
ஈ)விரவுத்திணை, உயர்திணை
விடை : ஆ ) உயர்திணை , அஃறிணை
8. பிறகொரு நாள் கோடை' என்னும் இக்கவிதை எந்தத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அ)இன்று ஆ) நீர்வெளி
இ) அய்யப்ப மாதவன் கவிதைகள்
ஈ)மழைக்குப் பிறகும் மழை
விடை : இ ) அய்யப்ப மாதவன் கவிதைகள்
9 ) உலக சுற்றுச்சூழல் நாளாக கொண்டாடப்படும் தினம் எது?
அ) ஜூன் 2 ஆ ) ஜூன் 5
இ ) ஜூன் 6 ஈ) ஜூன் 8
விடை : ஆ ) ஜூன் 5
10. 'முதல் கல்' என்னும் சிறுகதையின் ஆசிரியர் யார்?
அ ) பூமணி ஆ) உத்தமசோழன்
இஜெயமோகன் ஈ ) சுஜாதா
விடை : ஆ ) உத்தம சோழன்
பகுதி - ஆ
குறுவினா
1 ) ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்' என்னும் முழக்கத்தொடர் வாயிலாக எவற்றை வலியுறுத்துவாய்?
- பசுமைக்குடில் வாயுக்களுக்கு மாற்று ஆற்றலான காற்று ஆற்றலைப் பெற வழிவகுக்கும்.
- காற்றில் கலந்துள்ள மாசுக்களை மறையச் செய்யும்.
- உயிர் வளியைப் பெருகச்செய்யும்.
- சாலையோரங்களில் மரம் நடுவதால் மண்ணரிப்பைத் தடுக்கும்.
- இவ்வாறு மரங்களின் பயன்களையும் , மரம் வளர்ப்பது நமது கடமை என்பதையும் ' ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் ' என்னும் முழக்கத் தொடர் வாயிலாக வலியுறுத்துவேன்.
2 மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைக் கடுமையாக சேதப்படுத்தியதன் விளைவை இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறான் . இரு தொடர்களாக்குக.
- i ) மனிதன் தன் பேராசை காரணமாக இயற்கை வளங்களைச் சேதப்படுத்தினான்.
- ii ) இயற்கை வளங்களைச் சேதப்படுத்தியதன் விளைவை இன்று மனிதன் சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.
3) ' நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' - விளக்கம் தருக?
- பெய்த மழையால் நகர மாசுகள் அகற்றப்பட்டன.
- மழைக்காலமாயினும் திடீரென வெளிப்பட்ட சூரிய வெளிச்சத்தால் , நகரம் புதுப்பொலிவாகிறது.
- இதனை , ' நகரம் , பட்டை தீட்டிய வெள்ளை வைரமாய் ' விளங்குகிறது என்கிறார் கவிஞர்.
4 ) இனநிரை பிரித்துப் புணர்ச்சி விதி எழுதுக?
இனநிரை = இனம் + நிரை
- மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் - என்ற விதிப்படி ' ம் ' நீங்கியது.
- இன + நிரை ------ இனநிரை எனப்புணர்ந்தது.
5. வாகைத்திணை என்றால் என்ன?
- வெற்றி பெற்ற அரசனும் , அவனது வீரர்களும் வெற்றியைக் கொண்டாடுவது ' வாகைத்திணை ' எனப்படும்.
பகுதி - இ
III ) சிறுவினா
6 ) வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
- கோவலர்கள் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த , வளைந்த கோலையுடைய ஆயர் எருமை , பசு , ஆடு ஆகிய நிரைகளை மேடான வேறு நிலத்தில் மேயவிட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- குளிரின் மிகுதியால் ஆயர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் ஆயர்களது பற்கள் நடுங்கின.
- மலையையே குளிரச் செய்வது போலிருந்தது குளிர்கால நள்ளிரவு.
7. மழைவெள்ளப் பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
- பேரிடர்க் காலங்களில் தாங்கக் கூடியவையாகப் புதிய கட்டுமானங்களை அமைக்க வேண்டும்.
- நீர் வழிப்பாதைகளுக்கான தெளிவான வரைபடம் உருவாக்கப்பட்டு , அப்பாதைகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
- சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டங்களைச் சமூக இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்.
- கடற்கரை ஓரங்களில் சதுப்பு நிலக்காடுகளை வளர்த்தல் வேண்டும்.
8 ) பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக.
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ' நடுவண் அரசால் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று அமைக்கப்பட்டது.
- புயல் , வெள்ளம் , நிலநடுக்கம் , வறட்சி , சுனாமி , நிலச்சரிவு , தீ விபத்து , சூறாவளி , பனிப்புயல் , வேதி விபத்துகள் முதலான பேரிடர்கள் நிகழும்போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற இந்த ' தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ' உதவுகிறது.
- மாநிலம் , மாவட்டம் , ஊராட்சி , சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் குழுக்கள் அமைத்துப் பேரிடர் காலங்களில் செயலாற்ற பேரிடர் மேலாண்மை ஆணையம் வழிவகை செய்கிறது.
8. 'வையகம் பனிப்ப' எனத் தொடங்கும் மனப்பாடப் பாடலை எழுதுக?
'வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோல் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடுஇதழ்க் கண்ணி நீர் அலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலிய பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க*
-நக்கீரர்
பாவகை - நேரிசை ஆசிரியப்பா
10. கூதிர்ப்பாசறை துறையைச் சான்று தந்து விளக்குக.
துறை : கூதிர்ப்பாசறை
கூதிர்ப்பாசறை - போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு.
எ.கா : குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்
பாடலின் பொருள்
- தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது. தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர். தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர். அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது. பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கை-களுக்குச் சூடேற்றியபோதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
- விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின. மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன. மலையையே குளிரச்செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
துறைப்பொருத்தம் :
போர் மேற்சென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீட்டில் நிலவும் வாடை மிகுதியால் ஆயர்கள் , பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தைக் கூறுவதால் இப்பாடல் கூதிர்ப்பாசறைக்குப் பொருத்தமாயிற்று.
பகுதி - ஈ
IV நெடுவினா
11. நெகிழி தவழ்த்து நிலத்தை நிமிர்த்து என்னும் தலைப்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைதாசனாருடன் நீங்கள் நடத்திய கற்பனைக் கலந்துரையாடல் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
நெகிழி தவிர்த்து நிலத்தை நிமிர்த்து: நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ஒரு கலந்துரையாடல் நிகழ்வு மூலம் காணலாம்.
- பங்கேற்போர், நெறியாளர் - பசுமைதாசன்
- உறுப்பினர் நலன் விரும்பி, நல்லாள், குட்டுவன்
நலன் விரும்பி : ஐயா வணக்கம்!
பசுமைதாசன் : வணக்கம் விரும்பி!
ந.வி : அய்யா அதோ நல்லாளும், குட்டுவனும் வருகின்றனர். ஏதாவது பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
ப.தாசன் : கண்டிப்பாகக் காலம் செல்வதைப் பார்த்தால் நமக்கு நிற்க நேரம் இருக்காது போலிருக்கிறது.
குட்டுவன் : சரியாகச் சொன்னீர்கள்
நல்லாள் : அய்யா! அரசு நெகிழிக்கு சனவரி - 1 முதல் தடை விதித்துள்ளதே!
ப.தா :ஆம் கண்பாதி கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!
ந.வி : அது என்ன? கண் பாதி கெட்ட பிறகு.........
ப.தா : நெகிழியால் எத்தனை பாதிப்புகள்! நெகிழியில் காய்கள் பழங்கள் இவற்றைப் போட்டு இறுகக் கட்டி வைத்தால் எல்லாம் அழுகியும், அவிந்தும் போகும்.
ந. வி : நான் கூட ஒரு முறை ஒரு நெகிழியில் காயும், ஒரு நெகிழியில் கனியும் வாங்கிச் சென்றேன்.
ப.தா : பிறகு என்னவாயிற்று.
ந.வி : காய்கள் அவிந்துபோயின; பழங்கள் அழுகிப் போயின.
ப.தா : நெகிழியின் உள்ளே காற்று உள் செல்லாததே இதற்குக் காரணம்.
குட்டுவன் : நான்கூட ஒருமுறை எங்கள் வீட்டில் அம்மா அழுகிய காயும், கனியும் வைத்த நெகிழியைத் தூக்கிப் போட்டதைப் பார்த்தேன்.
ப.தா : பட்டால் தான் நமக்குத் தெரியும்
ந.வி : நாம் பொருள்களை நெகிழியில் வாங்கி வருகிறோம். பொருள்களை எடுத்துக் கொண்டு தூக்கி எறிகிறோம் அல்லது, குப்பைத் தொட்டியில் போடுகிறோம். அவற்றால் பாதிப்பு இல்லையா? ஐயா!
ப.தா : பாதிப்பு ஏராளம்! நிலம், நீர், காற்று இத்தனையும் மாசடைந்து நம் சுற்றுச் சூழலையும் பாதிக்கிறது.
ந.வி : சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா!
ப.தா : சொல்கிறேன் கேளுங்கள். நிலத்தில் குவிந்து கிடக்கும் நெகிழிகள் மண்ணில் சிறிது சிறிதாகக் கலந்து மண்வளத்தைப் பாதிக்கிறது. அதனால் பயிர்கள் செழிப்பாக வளர்வதில்லை. மழை நீரில் கலப்பதால் நீர் நச்சுத் தன்மை பெற்று உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. காற்றில் கலப்பதால் நாம் நுகரும் காற்று மாசடைந்து உடல் நலம் பாதிப்பு ஏற்படுகிறது. மொத்தத்தில் மனிதனின் சுற்றுப்புறம் மாசு நிறைந்ததாக மாறிவிடுகிறது.
குட்டுவன் :மருத்துவக் கழிவுகள் ஒரே இடத்தில் கொட்டப்படுகின்றனவே
ந.வி :ஆற்றங்கரை, குளக்கரை எனப் பலஇடங்களில் சந்தடி இல்லாமல் கொட்டிச் செல்கின்றனர். அவை சாதாரண நெகிழிகளைவிடப் பல மடங்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மருத்துவக் கழிவுகளில் நச்சுத் தன்மை அதிகமாக உள்ளன. மருத்துவம் சுகாதாரத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவக் கழிவுகளோ சுகாதாரத்தைக் கெடுக்கிறது.
ந.வி : இதற்குத் தீர்வு என்ன ஐயா!
ப.தா : முதலில் நெகிழிகள் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்; சணலால் உருவாக்கும் பைகளைப் பயன்படுத்தலாம். மெல்லிய துணிப்பைகளைக் கூடப் பயன்படுத்தலாம்.
ந.வி : மனிதன் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடியவன். அவன் நெகிழி பயன்பாடு என்னும் பழக்கத்திற்கு விடுதலை தர வேண்டும்.
ப.தா : நன்றாகச் சொன்னாய் விரும்பி. நான் சொல்ல வேண்டியதை நீ
சொல்லிவிட்டாய்! நேரம் கடந்துவிட்டது மீண்டும் சந்திக்கலாம்,
மற்றவர்கள் : நன்றி அய்யா! நல்லது அய்யா! சந்திப்போம்! சிந்திப்போம் !
12. பொறுப்புணர்ச்சியின்றி இருந்த ஊரைத் தன் பொறுப்புணர்வால் மாற்றிய மருதனின் பண்பு நலத்தை விவரிக்க.
மருதனின் பண்புநலம்
முன்னுரை:
- உத்தம சோழனின் மழை வெள்ளத்தை மையமாகக் கொண்ட படைப்பிலக்கியமான ‘முதல்கல்' என்ற சிறுகதை 'தன் கையே தனக்குதவி' என்ற பழமொழிக்கிணங்க படைக்கப்பட்டுள்ளது. வள்ளுவர், ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசை விலா, ஊக்கம் உடையான் உழை, என்பார். இது முயற்சிக்கு முன்னோடியாக அமைந்த குறள். இத்தகைய முயற்சியின் நாயகனாக மருதன் காணப்படுகிறான். “முடியாது என்பது முட்டாளின் அகராதி” என்பது ஆன்றோர் வாக்கு. இக்கருத்தைத் தம் ஊராரை அறியச் செய்து உண்மைத் தொண்டனாய்க் காட்சி தருபவன்தான் மருதன். மருதன் மருந்தாயும், விருந்தாயும் படைக்கப்பட்ட பாத்திரம்.
மருதனின் சிந்தனை!
- வளவனாற்றின் வடகரையில் நின்று பார்த்த மருதனுக்கு வெள்ளக்காட்டைக் கண்டதும் உள்ளம் துடித்தது ; உடல் துடித்தது ; உயிரும் துடித்தது. உழவர்களின் உழைப்பு; உரம்; நாற்று நட்டது. இவை எல்லாம் ஐப்பசி மாத வெள்ளப் பெருக்கால் நட்டாற்றில் விடப்பட்டது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்றார் வள்ளலார். இப்போதோ, வெள்ளத்தால் ஓடிய பயிரைக் கண்ட போதெல்லாம் ஓடினேன், என்றது மருதனின் மனம். மனம் இருக்கிறது மக்களையும், மழை வெள்ளத்தில் சிக்கிய பயிரையும் காக்க. உதவி செய்வாரில்லை; உற்ற நேரமும் அதுவாகத் தெரியவில்லை. இப்போது பயிரைக் காப்பதைவிட உயிரைக் காப்பதும், ஊரைக்காப்பதும் அவசியம் என அவனுக்குத் தோன்றியது.
மருதனின் மனத்தில் உதித்த சிந்தனை
- மருதன் வடிகால் மதகைப் பார்த்தான். மதகைத் தொடர்ந்து மூன்று மைல்நீள வாய்க்காலைப் பார்த்தான். வாய்க்கால் முழுவதும் நீரைத் தடுத்த நெய்வேலி காட்டாமணக்குச் செடியைப் பார்த்தான். அவனுக்குள் நீரை வடிகட்ட, ஊரைக்காக்க, பயிரைக் காக்க வழி தெரிந்தது. ஊரார் ஆளுக்கொரு செடியாகக் காட்டா மணக்கைப் பிடுங்கி எறிந்தால் நீர் வடியும்; நிம்மதி கிடைக்கும் எனநினைத்தான். தன் கருத்தை மீன் பிடிக்கும் மாரியிடம் சொன்னாள். மாரியோ தன் தொழிலிலேயே கண்ணாய் இருந்தான்.
மருதன் போட்ட மனு:
- கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடைபாதை வரப்போரம் கைலியும், பனியனும் சேறால் நனைந்த நிலையில் நடந்தான். அல்லிமலர் மலர்ந்துகிடக்கும் குளக்கரை மேட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மாவைப் பார்த்தான். முல்லையம்மாவிடம் பேச்சுக் கொடுத்த மருதன் பூவரச மரத்தில் ஆட்டுக்குத் தழை ஒடிக்கும் காளியப்பனிடம் சென்றான். வடக்கே இருக்கும் எட்டு ஊர்த்தண்ணீரால் வர இருக்கும் பாதிப்பைச் சொன்னான். ஊரைக் காக்க, பயிரைக் காக்க மூன்று மைல் தூர வாய்க்காலில் மண்டிக் கிடக்கும் புல், பூண்டு, ஆமணக்கை அகற்ற வேண்டும். இதற்கு ஊராரைக் கூட்ட வேண்டும் என்றான். காளியப்பன் பேரக்குழந்தைக்கு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டும் எனத் தட்டிக் கழித்தார். அவர் சொன்னால் ஊரே கூடும். ஆனால் மருதனின் முயற்சி வீண் முயற்சியாகப் போயிற்று.
மனம் சோர்ந்த மருதன்
- காளியப்பனைச் சந்தித்துத் தோல்வியைக் கண்ட மருதன் ஊர் எல்லையை மிதித்தபோது அந்த ஊரின் முதல் பட்டதாரியான பிரேம் குமாரிடம் தன் கருத்தைச் சொன்னான்.
- அவன் பொதுப்பணித் துறையில் மனு கொடுக்கும்படி சொன்னான். மேலும் தன் தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சமாளித்தான். வீட்டிற்குச் சென்ற மருதன் மனம் சோர்ந்து அதனால் உடல் சோர்ந்து கன்னத்தில் கைவைத்த படி உட்கார்ந்தான்.
- அவன் மனைவி அல்லி நிலைமையைப் புரிந்துகொண்டு சுடு கஞ்சி கொடுத்தாள். அதைக் குடித்த மருதன் மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்தான். அவளோ நமக்கு 'ஒரு சர்க்கரைக் குழி' நிலம் கூட இல்லை எனச் சமாளித்தாள். மனைவி அன்பையும் மொச்சைக்குழம்பு, முரட்டுச்சோறு, முட்டைகள் ஆகியவற்றை மனம் இல்லாம கனத்த மனத்தோடு சாப்பிட்டு முடித்துச் சோர்ந்து படுத்தான். பிரச்சினைகள் சோர்வை அளிக்கும், செயல்பாடுகள் சோர்வுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும்.
செயல்வீரன் மருதன்:
- பொழுது விடியும் வரை மருதனின் மனம் ஓயவில்லை. பொழுது விடியும் முன் அவன் மனமும் காலும் வாய்க்காலை நோக்கி ஓடின. வாய்க்காலின் கரையோரம் மண்டிக்கிடந்த ஆமணக்குச் செடிகளையும், புல் பூண்டுகளையும் வாய்க்கால் ஓரம் அறுத்துப் போட்டான். காலையில் கணவனைக் காணாமல் திகைத்த அல்லி, அல்லிக்குளம் தாண்டி வாய்க்கால் ஓரம் சென்றாள். கணவனுடன் தானும் சேர்ந்து ஆமணக்குச் செடியை அகற்றும் பணியில் ஈடுபட்டாள். அக்கரையில் மீன் பிடித்த மாரி வலையை உதறிக் கரையோரம் போட்டான். வளைந்து கிடந்த காட்டாமணக்குகளை அறுக்கத் தொடங்கினான். அந்த வழியாக வில்வண்டியில் சென்ற காளியப்பன் வண்டியை வீட்டுக்குத் திருப்பி ஓட்டிச் செல்லும்படி சொல்லி விட்டு அவரும் காட்டாமணக்கைக் கட்டுக் கட்டாக அறுக்கத் தொடங்கினார். ஊரார் செய்தி அறிந்து ஓடி வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
முடிவுரை
'கருமத்தைச் செய் பலனை எதிர்பாராதே'
என்கிறது கீதை. கபிலர் அகவலோ
“ஒன்றே செய்
ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்
இன்றும் இன்னே செய்"
- என்கிறது. இக்கருத்துக்களின் மொத்த உருவமாய் நின்று முனைப்புடன் காட்டாமணக்கை அகற்றும் பொதுப்பணியில் ஈடுபட்டவன்தான் மருதன். மெய்வருத்தம் பாராது ஊர் வருத்தம் தீர்க்க உழைத்தவன்தான் மருதன். அவனின் நற்செயலுக்கு உடனே உதவி கிடைக்காவிட்டாலும் சிறுபொழுதுக்குள் நிலைமையை அறிந்து ஊரார் கூடினர். ஊராரைத் திரட்டிய உண்மைத் தொண்டன் மருதன்போல் பலர் உருவாகட்டும்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.