Daily TN Study Materials & Question Papers,Educational News

இயல் 1 விரிவானம் புயலிலே ஒரு தோணி - 10th tamil - puyalile oru thoni

இயல் 1 விரிவானம் புயலிலே ஒரு தோணி

இயற்றியவர் ப.சிங்காரம்

நுழையும்முன்

இயற்கையின்‌ அசைவு சீற்றமாய்‌, ஊழித்‌ தாண்டவமாக மாறுகையில்‌ எதிர்‌ நிற்க இயலாமல்‌ நாம்‌ தவிக்கிறோம்‌. கடலில்‌ கப்பலைச்‌ சுருட்டிச்‌ செல்ல எத்தனிக்கும்‌ புயலின்‌ பெருங்காட்சியைப்‌ படம்‌ பிடித்துக்‌ காட்டுகிறது இக்கதை. புயலின்‌ சீற்றத்தையும்‌, அதன்‌ வெறியாட்டத்தையும்‌, கப்பலின்‌ தத்தளிப்பையும்‌, பயணிகளின்‌ அச்சத்தையும்‌ இந்நெடுங்கதையின்‌ மொழி வீச்சு, கண்முன்‌ நிறுத்துகிறது. இந்தக்‌ கதை வெளிப்படுத்தும்‌ மொழியின்‌ ஆற்றலை உணர்ந்து வியப்போம்‌!

 

புலம்பெயர்ந்த தமிழர்களில்‌ இந்நூலாசிரியரான ப.சிங்காரமும்‌ ஒருவர்‌. இவர்‌

இந்தோனேசியாவில்‌ இருந்தபோது இரண்டாம்‌ உலகப்போர்‌ நிகழ்ந்தது. ஆசிரியரின்‌ நேரடி அனுபவங்களோடு கற்பனையும்‌ கலந்த கதைதான்‌ புயலிலே ஒரு தோணி என்னும்‌ புதினம்‌. பாண்டியன்‌ இப்புதினத்தின்‌ கதைநாயகன்‌. அவன்‌ கடற்பயணத்தில்‌ கண்ட காட்சிகளும்‌ அதன்‌ தொடர்ச்சியாக நடைபெறும்‌ நிகழ்வுகளும்தான்‌ இக்கதைப்பகுதி.

 

கொளுத்திக்கொண்டிருந்த வெயில்‌ இமைநேரத்தில்‌ மறைந்துவிட்டது: புழுங்கிற்று. பாண்டியன்‌ எழுந்துபோய்‌ அண்ணாந்து பார்த்தான்‌. மேகப்‌ பொதிகள்‌ பரந்து திரண்டு ஒன்றிக்‌ கும்மிருட்டாய்‌ இறுகி நின்றன. அலைகள்‌ எண்ணெய்‌ பூசியவை போல்‌ மொழுமொழுவென நெளிந்தன. காற்றையே காணோம்‌. ஒரே இறுக்கம்‌.

 

கிடுகிடுக்கும்‌ இடி முழக்கத்துடன்‌ மின்னல்‌ கீற்றுகள்‌ வானைப்‌ பிளந்தன. வானம்‌

உடைந்து கொட்டுகொட்டென்று வெள்ளம்‌ கொட்டியது. சூறாவளி மாரியும்‌ காற்றும்‌

கூடிக்கலந்து ஆடிக்‌ குதித்துக்‌ கெக்கலித்தன. தொங்கான்‌ அப்படியும்‌ இப்படியுமாய்த்‌ தாவிக்குதித்து விழுந்து திணறித்‌ தத்தளிக்கிறது. தொங்கான்‌ -கப்பல்‌

 

படம் புயல் காற்றில் சிக்கி கலங்கும் கப்பல் கடலில் செல்லும் காட்சி படமாக இடம் பெற்றுள்ளது

எலும்புகள்‌ முறிவதுபோல்‌ நொறு நொறு நொறுங்கல்‌ ஒலி. தலைக்கு மேல்‌ கடல்‌...

இருளிருட்டு, இருட்டிருட்டு, கடல்‌ மழை புயல்‌ வானம்‌... எங்கிருந்தோ தொங்கிய

வடக்கயிற்றை வலக்கையால்‌ பற்றிக்‌ கிடந்தான்‌ பாண்டியன்‌.

 

திடுமென அமைதி பாய்ந்து வந்து மிரட்டியது. வானும்‌ கடலும்‌ பிரிந்து தனித்துத்‌

தென்பட்டன.

 

பலகை அடைப்புக்குள்ளிருந்து கப்பித்தான் கத்துகிறான்:

 

கப்பித்தான்‌ - தலைமை மாலுமி (கேப்டன்‌)‌

 

ஓடி வாருங்கள்‌! இங்கே ஓடி வாருங்கள்‌!

 

பாண்டியன்‌ எழுந்தான்‌. எங்கெங்கோ இடுக்குகளில்‌ முடங்கிக்‌ கிடந்த உருவங்கள்‌ தலைதூக்கின. தொங்கான்‌ தள்ளாடுகிறது - அலைகள்‌ - மலைத்தொடர்‌ போன்ற அலைகள்‌ மோதித்‌ தாக்குகின்றன. தட்டுத்‌ தடுமாறி நடந்தோடினர்‌.

 

வானும்‌ கடலும்‌ வளியும்‌ மழையும்‌ மீண்டும்‌ ஒன்று கூடிக்‌ கொந்தளிக்கின்றன. வானம்‌ பிளந்து தீ கக்குகிறது. மழை வெள்ளம்‌ கொட்டுகிறது. வளி, முட்டிப்‌ புரட்டுகிறது. கடல்‌, வெறிக்‌ கூத்தாடுகிறது. தொங்கான்‌ நடுநடுங்கித்‌ தாவித்‌ தாவிக்‌ குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. முகத்தில்‌ வெள்ளம்‌. உடலில்‌ வெள்ளம்‌. கால்‌ கையில்‌ வெள்ளம்‌. உடை, உடலை இறுக்கியிறுக்கி ரம்பமாய்‌ அறுக்கிறது. தொங்கான்‌ தாவி விழுந்து சுழல்கிறது. மூழ்கி நீந்துகிறது. தாவி நீந்துகிறது. இருட்டிருட்டு. கும்மிருட்டு. குருட்டிருட்டு. சிலுசிலு மரமரப்பு. கொய்ங்‌ புய்ங்‌ கொய்ங்‌ புய்ங்‌ கொய்ங்‌ புய்ங்‌. இடி முழக்கச்‌ சீனப்‌ பிசாசுகள்‌ தாவி வீசுகின்றன. மூட்டைகள்‌ சிப்பங்கள்‌ நீந்தியோடி மறைகின்றன. தொங்கான்‌ குதித்து விழுந்து நொறு நொறு நொறுங்குகிறது. சுழன்று கிறுகிறுத்துக்‌ கூத்தாடுகிறது. கடலலை அடிக்கிறது...

 

என்னயிது! சூரிய வெளிச்சம்‌! சூரியன்‌! சூரியன்‌! சூரியன்‌!... தொங்கானில்‌ நீர்‌ தெளிகிறது. பாய்மரம்‌ ஒடிந்து கிடக்கிறது. பொத்துக்‌ கொப்புளிக்கும்‌ பவ்வ நீரை மாலுமிகள்‌ இறைத்து ஊற்றுகின்றனர்‌. ஓட்டையை அடைக்கிறார்கள்‌. ஆப்பு அடிக்கிறார்கள்‌. மரம்‌ வெட்டுகிறார்கள்‌, செதுக்குகிறார்கள்‌...

 

தொங்கானின்‌ இருபுறமும்‌, பின்னேயும்‌ தேயிலைப்‌ பெட்டிகளும்‌ புகையிலைச்‌ சிப்பங்களும்‌ மிதந்து வருகின்றன.

 

பாண்டியன்‌ நாற்புறமும்‌ கடலைப்‌ பார்த்து மலைத்து நின்றான்‌.

 

கடற்கூத்து எவ்வளவு நேரம்‌ நீடித்ததென்று கணக்கிட முடியவில்லை. தொடங்கியபோதோ, முடிந்தபோதோ, முடிந்து வெகுநேரம்‌ வரையிலோ யாரும்‌ கடிகாரத்தைப்‌ பார்க்கவில்லை. எல்லாக்‌ கடிகாரங்களும்‌ நின்றுபோயிருந்தன.

 

தொங்கான்‌, தன்வசமின்றித்‌ தடுமாறிச்‌ செல்கிறது. கடற்கூத்தின்போது மாலுமிகளால்‌ தூக்கி எறியப்பட்ட பெட்டிகளும்‌ சிப்பங்களும்‌ மூட்டைகளும்‌ மிதந்து உடன்‌ வந்தன. புயல்‌ மயக்கத்திலிருந்து யாரும்‌ இன்னும்‌ முற்றாகத்‌ தெளிச்சி பெறவில்லை. பினாங்கு எவ்வளவு தொலைவில்‌ இருக்கிறது. எப்போது போய்ச்‌ சேரலாம்‌? பதில்‌ சொல்வார்‌ யாருமில்லை.

 

இரவில்‌ மேல்‌ தட்டுக்கு வந்து கப்பித்தான்‌ வானையும்‌ கடலையும்‌ ஒரு சுற்றுப்‌ பார்த்துவிட்டுத்‌ தலையைச்‌ சொறியலானான்‌. பாண்டியன்‌ நெருங்கிச்‌ சென்று நிலவரத்தைக்‌ கேட்டான்‌. கப்பித்தான்‌ சீனமும்‌ மலாயும்‌ கலந்த மொழியில்‌ சொன்னான்‌.

 

இனிமேல்‌ பயமில்லை. இரண்டு நாளில்‌ கரையைப்‌ பார்க்கலாம்‌.

 

அன்றிரவு யாரும்‌ உண்ணவில்லை; பேச்சாடவில்லை.

 

மறுநாள்‌ காலையில்‌ சூரியன்‌ உதித்தான்‌. கடல்‌ அலைகள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாய்‌,

முந்தியதைத்‌ தொடர்ந்த பிந்தியதாய்‌ வந்து மொத்து மொத்தென்று தொங்கானை மோதின. பறவை மீன்கள்‌ இருபுறமும்‌ கூட்டம்‌ கூட்டமாய்ப்‌ பறந்து விளையாடின. தொங்கான்‌ மிதந்து சென்றது, கடலின்‌ இழுவைக்கிணங்கி.

 

பகல்‌ இரவாகி பகலாகி இரவாகியது. பிறைமதி வெளிச்சம்‌ சிந்திற்று. கருநீலவானில்‌ விண்மீன்கள்‌ வெகு ஒளியுடன்‌ கண்‌ சிமிட்டி நின்றன. உப்பங்காற்று உடலை வருடியது. அவுலியா மீன்கள்‌ கூட்டம்‌ கூட்டமாய்‌, கண்மாயில்‌ முதுகு தெரிய மூழ்கி நீந்தும்‌ எருமைகளென முனகல்‌ ஒலியோடு பின்‌ தொடர்ந்தன. அலைகள்‌ நெளிந்தோடின.

 

சிப்பம்‌ - கட்டு, பவ்வம்‌ - கடல்‌, பறவை மீன்‌- பறக்கும்‌ மீன்‌, அவுலியா மீன்‌ - கடற்பசு.

 

கடற்கூத்துக்குப்‌ பின்‌ ஐந்தாம்‌ நாள்‌ மாலையில்‌ வானோடு வானாய்க்‌ கடலோடு கடலாய்‌ மரப்பச்சை தெரிவது போலிருந்தது. சுமார்‌ அரைமணி நேரத்துக்குப்‌ பின்‌ மீன்பிடி படகு விளக்குகள்‌ தென்பட்டன.

 

கரை! கரை! கரை!

 

அடுத்தநாள்‌ முற்பகலில்‌ பினாங்குத்‌ துறைமுகத்தை அணுகினார்கள்‌. மணிக்கூண்டு தெரிகிறது. கட்டட வரிசை. தெருவில்‌ திரியும்‌ வண்டிகள்‌, ஆட்கள்‌...

 

தொங்கான்‌, கரையை நெருங்கிப்‌ போய்‌ நின்றது. தொலைதூர நாவாய்கள்‌ கரையை மொய்த்திருந்தன. ஒவ்வொன்றிலிருந்தும்‌ கேள்வி எழுந்தது. "எங்கிருந்து வருகிறீர்கள்‌? எங்கிருந்து வருகிறீர்கள்‌?

 

"பிலவான்‌... பிலவான்‌."

 

சுமத்ரா பிரயாணிகள்‌ துடுப்புப்‌ படகில்‌ இறங்கிப்‌ போய்‌ நடைப்பாலத்தில்‌ ஏறி நடந்து சுங்க அலுவலகத்திற்குச்‌ சென்று பிரயாண அனுமதிச்‌ சீட்டுகளை நீட்டினர்‌.

 

"தமிரோ?" ஜப்பானிய அதிகாரி உறுமினார்‌.

 

"யா, மஸ்தா." தமிழர்கள்தாம்‌ என்று தலைகுனிந்து வணங்கித்‌ தெரிவித்தனர்‌.

 

பிரயாணிகளைச்‌ சில விநாடிகள்‌ நோட்டமிட்ட அதிகாரி, சீட்டுகளில்‌ முத்திரை வைத்துத்‌ திருப்பிக்‌ கொடுத்தார்‌.

 

பிலவான்‌ - இந்தோனேசியாவிலுள்ள இடம்‌.

 

நூல்‌ வெளி

படம் புயலிலே ஒரு தோணி நூலாசிரியர் பா.சிங்காரம் அவர்களின் நிழல் படம் இடம்பெற்றுள்ளது

புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ பற்றிய முதல்‌ புதினம்‌, புயலிலே ஒரு தோணி. இந்நூலாசிரியர்‌ ப.சிங்காரம்‌ (1920 - 1997). இந்தோனேசியாவில்‌ இருந்தபோது, தென்கிழக்காசியப்‌ போர்‌ மூண்டது. அச்சூழலில்‌, மலேசியா, இந்தோனேசியா பகுதிகளில்‌ நிகழ்வதாக உள்ள கற்பனைப்‌ படைப்பு இப்புதினம்‌. அதில்‌ கடற்கூத்து என்னும்‌ அத்தியாயத்தின்‌ சுருக்கப்பட்ட பகுதி இங்குப்‌ பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

 

ப.சிங்காரம்‌ சிவகங்கை மாவட்டம்‌, சிங்கம்புணரியைச்‌ சேர்ந்தவர்‌; வேலைக்காக இந்தோனேசியா சென்றார்‌; மீண்டும்‌ இந்தியா வந்து தினத்தந்தி நாளிதழில்‌ பணியாற்றினார்‌. இவர்‌ அன்றைய சூழலில்‌ அவருடைய சேமிப்பான 7.5 இலட்சம்‌ ரூபாயை மாணவர்களின்‌ கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார்‌.

 

பெட்டி செய்தி

தொன்றுதொட்டு இன்றுவரை நின்று நிலவும் ஊர்களில் ஒன்று

முந்தோன்றிய மூத்தகுடி

வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும்

மாவும் பலாவும் சூழடுத்து ஓங்கிய

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்

சிலப்பதிகாரம், காடுகாண் காதை: 53 55

சிலப்பதிகாாரம் குறிப்பிடும் ஊர் திண்டுக்கல் மாாவட்டத்தின் சிறுமலை

 

கற்பவை கற்றபின்‌...

1. கடலில்‌ புயலின்‌ தாக்கத்தினால்‌ ஏற்பட்ட பதற்றத்தை வெளிப்படுத்த அடுக்குத்‌ தொடர்களும்‌ வருணனைகளும்‌ எவ்வாறெல்லாம்‌ பயன்பட்டுள்ளன என்பது குறித்து வகுப்பில்‌ பேசுக. (விழுவிழுந்து, நொறுநொறு)

 

2. நீங்கள்‌ எதிர்கொண்ட இயற்கை இடர்‌ குறித்து விவரித்து எழுதி வகுப்பில்‌

காட்சிப்படுத்துக. (மழை, வெள்ளம்‌, புயல்‌, வறட்சி)

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support