Daily TN Study Materials & Question Papers,Educational News

இந்த கோவிலுக்கு போய் இருக்கீங்களா? விருதுநகரில் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில்!

இந்த கோவிலுக்கு போய் இருக்கீங்களா? விருதுநகரில் மலையை குடைந்து கட்டப்பட்ட சிவன் கோயில்! 


குடைவரை கோயில் என்பது கட்டுமானங்கள் ஏதும் இன்றி மலையை குடைந்து கட்டப்பட்ட கோவிலை குறிக்கும். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் கற்றளி கோவில்களே அதிகம் காணப்படும் நிலையில், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் ஒரு குடைவரை கோயில் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திருமங்கலம் ராஜபாளையம் நெடுஞ்சாலையில் அழகாபுரிக்கு அடுத்துள்ள ஊர் தான் மூவரை வென்றான். மூவரை வென்றான் கிராமத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் சிறிய அளவிலான குன்று இருப்பதை காணலாம் அங்கு தான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் அமைப்பை பொருத்தவரை, கோவில் ஒரு மலையை குடைந்து கட்டப்பட்ட குடவரை கோவில்.

முன்பு இருக்கும் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மட்டுமே கற்களை கொண்டு கட்டப்பட்டது. மற்றபடி கருவறை முழுவதும் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளது. மூலவராக சிவன் தாய் பாறையிலேயே செதுக்கப்பட்டு காட்சி தருகிறார். கருவறையை ஒட்டிய பக்கவாட்டு பகுதியில் இடது பக்கத்தில் விநாயகர் சிற்பமும், வலது பக்கத்தில் ராஜ கோலத்தில் உள்ள முருகன் சிற்பம் மற்றும் நடமாடும் நடராஜரின் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாக மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வெளியே மரகதவல்லி அம்மன், தட்சிணா மூர்த்தி, முருகன், விநாயகர் போன்றோர் காட்சி தருகின்றனர். மூவரை வென்றான் கோவில் என்று அறியப்பட்டாலும் இதனை மக்கள் மொட்டமலை என்கின்றனர்.

Share:

GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. Mass a இருக்குமே....

 GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. Mass a இருக்குமே....

விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன்முறையாக விஜய்யை இயக்குகிறார் வெங்கட் பிரபு. அவர் எப்போது தனது மேக்கிங்கையும், திரைக்கதையையும் வித்தியாசமாகவும், ஜாலியாகவும் கொடுப்பவர் என்பதால் நிச்சயம் அவரது ஸ்டைல் விஜய்க்கு க்ளிக் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.


விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் விமர்சன ரீதியாக பின்னடைவையே சந்தித்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக ஒழுங்காக இல்லை. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


GOAT: இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். நிச்சயம் அவருக்கு இந்தப் படம் மாஸ் ரீ எண்ட்ரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் படம் பற்றிய ஆவலை தூண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


எப்போது ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும்படி வெங்கட் பிரபு பிளான் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி GOAT படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கண்டிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு GOAT படம் திருவிழா போல் கொண்டாடப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


ஷூட்டிங் அப்டேட்: படத்தின் ஷூட்டிங் கடைசியாக கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இதுதான் இறுதிக்கட்ட ஷூட்டிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தில் சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் கவனம் செலுத்தி விரைவில் வெங்கட் பிரபு முழு பணிகளையும் முடிக்கவிருக்கிறார்.


பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படத்தில் இருக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்றுதான் விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி. அதற்கேற்ப பெரும் எதிர்பார்ப்போடு கடந்த 14ஆம் தேதி படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. விசில் போடு என்று தொடங்கிய அந்தப் பாடல் ரசிகர்களை முழுதாக திருப்திப்படுத்தவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்த பாடல்கள் சூப்பராக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.


ஸ்ரீலீலா: இதற்கிடையே படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷா தோன்றுவார் என்று தகவல்கள் வெளியாகின. அது மேற்கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால் இப்போது படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது படத்தின் ஒரு பாடலுக்கு திரிஷாவுக்கு பதில் தெலுங்கில் இப்போது சென்சேஷனலாக இருக்கும் ஸ்ரீலீலாவை ஆட வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாகவும்; அதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.





Share:

ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி...!

ரசிகர்களுடன் 'கில்லி' படம் பார்த்த இயக்குனர் தரணி...!


விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'கில்லி' படம் சில தினங்களுக்கு முன்பு உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. முதல் நாளிலேயே சுமார் 8 கோடி வரை வசூலித்து சாதனை புரிந்துள்ளது. தமிழ், தெலுங்கில் இதுவரை ரீ-ரிலீஸ் ஆன படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்துள்ளது 'கில்லி' படம் தானாம்.


இப்படத்தை தரணி இயக்கியிருந்தார். 'கில்லி' படத்திற்கு முன்பாக “எதிரும் புதிரும், தில், தூள்” ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் விக்ரம் நடித்த 'தில், தூள்' இரண்டுமே சூப்பர் ஹிட் படங்கள். நான்காவதாக அவர் இயக்கிய 'கில்லி' படமும் சூப்பர் ஹிட் படம். அடுத்து தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'பங்காரம்' படத்தை இயக்கினார். அந்தப்படம் வெற்றி பெறவில்லை. அதற்கடுத்து தமிழில் அவர் இயக்கி விஜய் நடித்த 'குருவி', சிம்பு நடித்த 'ஒஸ்தி' ஆகிய படங்களும் வெற்றிகரமாக ஓடவில்லை.


கடந்த 13 ஆண்டுகளாக எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை. 'கில்லி' படத்தின் ரீ-ரிலீஸுக்குப் பிறகு பல யு டியுப் சேனல்களும் அவரைப் பேட்டி எடுக்க பரபரப்பாகி வருகிறார்கள். இந்நிலையில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்து ரசித்துள்ளார் இயக்குனர் தரணி. அவருடன் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த ஜானகி சபேஷ் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். தரணி எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


'கில்லி' ரிரிலீஸுக்குப் பிறகு தரணிக்கு மீண்டும் படம் இயக்கும் வாய்ப்புகள் வரலாம்.

Share:

சம்மருக்கு டூர் போறீங்களா.. தென் இந்தியாவில் உள்ள டாப் 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!!

சம்மருக்கு டூர் போறீங்களா.. தென் இந்தியாவில் உள்ள டாப் 5 இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.!!



இந்த சம்மருக்கு டூர் போக விரும்புகிறவர்களா நீங்கள்.. கோடைக்கால வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பிரேதசங்களுக்கு செல்ல விரும்புகிறீர்கள் என்றால், தென் இந்தியாவில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களை மிஸ் பண்ணிடாதீங்க.


கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் மக்கள் குடும்பத்துடன் டூர் செல்வது அதிகரித்துள்ளது. கோடைக்கால வெயிலில் இருந்து தப்பிக்க மலைப்பிரேதசங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வது அதிகரித்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.


இந்த ஆண்டு வெப்பம் மிகக் கடுமையாக மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்ப நிலை வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் சதத்தை தாண்டி விட்டது. இதனால், வெயிலில் இருந்து தப்பிக்க இந்த ஆண்டு மலைவாசஸ்தலங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நடுத்தர வசதி கொண்ட மக்களால் வட மாநிலங்களுக்கோ.. வெளிநாடுகளுக்கோ செல்ல முடியாது.


எனவே, தங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு அருகில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கு டிரிப் அடிப்பதையே விரும்புகிறார்கள். அந்த வகையில், தென் இந்தியாவில் உள்ள முக்கிய மலைவாசஸ்தலங்களை பற்றி இங்கே பார்க்கலாம்.


கூர்க்: இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்ட்ட கூர்க், இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இருக்கும். பனி படர்ந்த இயற்கை சூழல், காணும் இடம் எல்லாம் பச்சை பசேல் என பசுந்தோல் போர்த்தியது போன்ற மேற்கு தொடர்ச்சி மலை, ஊர்ந்து செல்லும் நீரோடைகள் என கூர்க் சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கும் மனதுக்கும் ஒருசேர விருந்தாக இருக்கும். காபி தோட்டங்களுக்கு பெயர் பெற்ற கூர்க்கில், காணும் இடம் எல்லாம் காபி பயிர்கள் ரம்மியமான சூழலை கொடுக்கும்.


ஊட்டி: மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டி சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் கோடைவாசஸ்தலமாக உள்ளது. தேயிலை தோட்டங்கள், மலைப்பகுதிகள் என இங்குள்ள இயற்கையான சூழல் பயணிகளின் மெய்சிலிர்க்க வைக்கும். நீலகிரி மலை ரயில் பயணம், ஊட்டி ஏரி என இங்கு வெயிலில் இருந்து இளைப்பாற அருமையான இடங்கள் உள்ளன.


கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் மேகக்கூட்டங்கள் தவழ்ந்து சென்று நம் மனதை வருடி செல்லும். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்களாக குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட் தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, வெள்ளி நீர் வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்டவை உள்ளது. அங்குள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும் செய்யலாம்..


ஏற்காடு: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது ஏற்காடு. ஏற்காட்டு மலையில் காணப்படும் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும்.


குன்னூர்: நீலகிரி மலையில் அமைந்துள்ள குன்னூர் தேயிலை உற்பத்திக்கு புகழ் பெற்ற இடமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிறந்த மலை பிரதேசங்களில் இதுவும் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள குன்னூர் ஊட்டியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. ஊட்டியில் காணப்படும் பரபரப்பு எல்லாம் நமக்கு செட் ஆகாது என நினைப்பவர்களுக்கு குன்னூர் சிறந்த இடமாக இருக்கும்.

Share:

இளங்கலை படிப்புகளில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

இளங்கலை படிப்புகளில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு..!


பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை மாணவர்கள் இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-11 கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், வரும் (2024-25) கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2 முடித்த ஏழை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


இலவச கல்வி திட்டம் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் விவரம் சென்னை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.unom.ac.in) வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பம், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அனைத்து சான்றிதழ்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - பள்ளிகளுக்கு எச்சரிக்கை!!!


கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவில் 14417 - ல் பெறப்பட்ட புகார் மனுவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. 


இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்குமாறும் , மாணவர்களை சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்க அழுத்தம் தரக் கூடாது என்றும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.


மேற்கூறப்பட்ட ஆணையை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் , தவறினால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் அனைத்து வகைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share:

5ம் வகுப்பு வரை அனிமேஷன் பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு.,!

5ம் வகுப்பு வரை அனிமேஷன் பாடம் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவு.,!

வரும் கல்வி ஆண்டில் இருந்து, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வீடியோ பாடங்களை நடத்துமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ், தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு, டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இதற்காக, மத்திய அரசின் நிதியில் கிராமப்புற பள்ளிகளிலும், ஆன்லைன் இணையதள இணைப்புகள் பெறப்படுகின்றன.


இந்த பணிகள் வரும் ஜூனுக்குள் நிறைவு பெற்று விடும் நிலையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு டிஜிட்டல் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களாக நடத்துவதற்கு, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மணற்கேணி என்ற செயலியில், இந்த வீடியோ பாடங்கள் உள்ளதாகவும், அவற்றை பதிவிறக்கி, பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Share:

இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு...!

இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற ஏப்.22-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு...!


இலவச கட்டாய கல்வி திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரைகட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.


இந்நிலையில், வரும் (2024-25) கல்வி ஆண்டில் இலவச சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 தொடங்கி மே 20-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.


வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share:

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?


தமிழகத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் இவர்களுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. 


இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழக அரசு இன்னும் வெளிவிடாத நிலையில் சில தனியார் பள்ளிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு எப்போது என்பது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பள்ளிகள் திறப்பு:-


தமிழகத்தில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்துள்ளது. அதற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ரமலான் பண்டிகை மற்றும் தேர்தல் நடைபெறும் காரணங்களுக்காக தற்போது ஒன்பது நாட்கள் தொடர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.


இவர்களுக்கு மிஞ்சியுள்ள பாடங்களுக்கான பொது தேர்வுகள் ஏப்ரல் 23,24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதன் பின் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது.


மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைவர் மத்தியிலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகளுக்கு ஜூன் 17ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்புகள் தேர்தல் முடிந்த பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதன் பின் பள்ளிகள் திறப்பதற்கான தேதி, அப்போது உள்ள வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸாகிறது 'மஞ்சும்மல் பாய்ஸ்'... எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸாகிறது 'மஞ்சும்மல் பாய்ஸ்'... எப்போது, எந்த தளத்தில் பார்க்கலாம்?


திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரீலீஸாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

குணா குகையை மையமாக வைத்து இயக்குநர் சிதம்பரத்தின் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையராங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


மலையாளத்தில் வசூல் வேட்டையை நடத்திய மஞ்சும்மல் பாய்ஸ் தமிழகத்தில் மட்டும் ரூ.50 கோடியை வசூல் செய்தது. உலகம் முழுவதும் ரூ.200 கோடியை வசூல் செய்த இந்த படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகிறது.


மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியிடப்படுகிறது.

முன்னர்  5-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி உள்ளது.



Share:

10 ரூபாய் நோட்டுகளும் இனி செல்லாதா? – ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!

10 ரூபாய் நோட்டுகளும் இனி செல்லாதா? – ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!



இந்தியாவில் பழைய பத்து ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூபாய் நோட்டுகள்

இந்தியாவில் ரிசர்வ் வங்கி நோட் பிரிண்ட் பிரைவேட் லிமிட் மற்றும் செக்யூரிட்டி பிரின்டிங் அண்ட் மீண்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வருகிறது. அந்த வகையில் 2019 – 20 நிதியாண்டில் ரூ.147 கோடி 10 ரூபாய் நோட்டுகளும், அடுத்த நிதியாண்டில் ரூ. 128 கோடியே 40 லட்சம் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டன. அதன்பின் 2021- 22 நிதியாண்டில் ரூ. 75 கோடி நோட்டுகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன.


இப்படி படிப்படியாக பத்து ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது.மேலும் கொரோனாவுக்கு பின் ரிசர்வ் வங்கி கிளீன் மனி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டம் மூலம் கிழிந்த பழைய நோட்டுகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் மனிகண்ட்ரோல் அறிக்கையின்படி 20 நோட்டுக்கள் அச்சிடுவதை விட ரூபாய் 10 நோட்டுகளை தயாரிக்க செலவு அதிகமாகும் என தெரிவித்துள்ளது. அதனால் புதிய பத்து ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் – போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் இதோ!

மூத்த குடிமக்களுக்கு மாத வருமானம் – போஸ்ட் ஆபீஸின் சூப்பர் திட்டம் இதோ!


போஸ்ட் ஆபீஸில் துவங்கப்பட்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மூலம் வயதானவர்களுக்கு ஓய்வு காலத்தில் ரூ.20,500/- மாத வருமானமாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்:

மத்திய அரசானது மூத்த குடிமக்களை கருத்தில் கொண்டு அவர்களது முதுமை காலத்தில் உதவும் வகையில் “மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை” போஸ்ட் ஆபீஸ் மூலமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,500/- வருமானாக வழங்கப்படும். அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு மாதம் ரூ.20,500/- வட்டியாக மத்திய அரசு மூலம் செலுத்தப்படுகிறது. இத்தகைய சேமிப்பு திட்டத்தின் பலனை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே பெற இயலும். அதுமட்டுமின்றி சூப்பர் ஆனுவேஷன், விஆர்எஸ் அல்லது சிறப்பு விஆர்எஸ் பெற்றவர்களும் இதன் பலனை பெறலாம்.

இத்திட்டத்தில் இணையும் நபர்கள் 1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதவாது பயனர்கள் 1000 ரூபாய் முதல் 30 லட்சம் வரை இதில் முதலிடலாம். இவ்வாறு முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு அரசானது 8.2 சதவீதம் வட்டி செலுத்துகிறது. இந்த வட்டி தொகையானது ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் பயனர்களின் கணக்கில் செலுத்தப்படும். இச்சேமிப்பு திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும் வருமான வரி சட்ட பிரிவு 80C-ன் படி, பயனர்கள் 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

ரயில் பயணத்திலும் இனி இருக்கையை தேர்வு செய்யலாம் – வெளியான குட் நியூஸ்!

ரயில் பயணத்திலும் இனி இருக்கையை தேர்வு செய்யலாம் – வெளியான குட் நியூஸ்!


ரயில் பயணிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய அறிவிப்பு:

பேருந்து முதல் விமானம் வரை பயணம் செய்யும் பயணிகள் தங்கள் விரும்பும் இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது. ஆனால் ரயில் பயணத்தில் மட்டும் தங்களது இருக்கையை பயணிகள் தேர்வு செய்ய முடியாது. இதற்கு தொழில் நுட்ப ரீதியிலான காரணங்கள் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது ரயில்வே நிர்வாகம் நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்து இருந்த வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது பயணிகள் தாங்கள் விரும்பும் சீட்டுகளை பஸ்களில் தேர்வு செய்வதுபோல ரயில்களிலும் இனி தேர்வு செய்து, முன்பதிவு செய்து கொள்ள முடியும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி எழுந்துள்ளது.

Share:

பயோ டெக்னாலாஜி படிப்புக்கான கேட்-பி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!

பயோ டெக்னாலாஜி படிப்புக்கான கேட்-பி தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..!


நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

அதேபோல், பயோ டெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்கள் பிஇடி என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வுகள் நாளை (ஏப்ரல் 20) கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 8-ல் தொடங்கி மார்ச் 10-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேலான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வெழுத உள்ள பட்டதாரிகளுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.


அவற்றை https://exams.nta.ac.in/DBT/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் 011-4075 9000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது dbt@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம்பெறலாம். மேலும், கூடுதல் தகவல்களை www.nta.ac.in என்ற என்டிஏ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Share:

கூகுள் நிறுவனத்தின் அதிரடி பணி நீக்கம் – தடுமாறும் ஊழியர்கள்!

கூகுள் நிறுவனத்தின் அதிரடி பணி நீக்கம் – தடுமாறும் ஊழியர்கள்!



கூகுள் நிறுவனம் அதிரடியாக நடப்பாண்டுக்கான பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


பணி நீக்கம்;

2023 ஆம் ஆண்டு உலக பணிநீக்க நடவடிக்கைகளில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகித்தது. பொருளாதாரம் மந்த நிலை சீராகி வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கைகள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது மீண்டும் பணி நீக்க அறிவிப்புகள் வெளியாகிறது. Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சுந்தர் பிச்சை முன்னதாகவே 2024 ஆம் ஆண்டில் பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கைகளை Google மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார். அதைப் போலவே தற்போது தொழில்நுட்ப மறு சீரமைப்பு திட்டங்கள் காரணமாக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக Google தலைமை நிதி அதிகாரி ரூட் போரட் அறிவித்துள்ளார்.


சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் நிதி பிரிவை சேர்ந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Google நிறுவனத்தின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் உள்ள அலுவலக ஊழியர்கள் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு கிளவுட் சேவைகள் மற்றும் தரவு மையங்கள் தொடர்பான தொழில் ரீதியான ஒப்பந்தத்தை கைவிட வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பதற்றத்தை ஏற்படுத்தியது.

Share:

மதுரை கள்ளழகர் திருவிழா கட்டுப்பாடுகள் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு!

மதுரை கள்ளழகர் திருவிழா கட்டுப்பாடுகள் ரத்து – உயர்நீதிமன்ற உத்தரவு!


மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.


கள்ளழகர் திருவிழா:

ஆண்டுதோறும் மிகவும் விமரிசையாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியான அழகர் மலை கோவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெறும். மதுரை மாவட்ட ஆட்சியர் நடப்பாண்டில் கள்ளழகர் திருவிழாவின்போது உயர் அழுத்த மோட்டார்கள் கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை அடிப்பதற்கு தடை மற்றும் முறையாக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்.


இந்நிலையில் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆனது கள்ளழகர் திருவிழாவின் போது முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கள்ளழகர் மீது நீரைப் பீய்ச்சி அடிக்க வேண்டும் என்ற மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாடு ரத்து செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளது.

Share:

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் அட்டை கட்டாயம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!


பாட்னா மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதார் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கி உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 ஆதார் அட்டை கட்டாயம்:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலக அறிக்கையின்படி, கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 134 குழந்தைகளின் ஆதார் அட்டைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை தயாரிக்க மட்டும் மாவட்டத்தில் 46 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், 27 மையங்களில் ஆதார் அட்டை தயாரித்து மேம்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.

மீதமுள்ள 19 ஆதார் மையங்களில் ஏப்ரல் இறுதிக்குள் ஆதார் தயாரிக்கும் பணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு இலவசமாக ஆதார் அட்டை எடுக்கப்பட்டு வருகிறது. ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு இருந்தால், அதை சரிசெய்ய ரூ.50 முதல் 100 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆதார் எண்களை பெற பணம் கேட்டால் புகார் தெரிவிக்கவும் அரசு தெரிவித்துள்ளது.

Share:

CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி !!

CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி !!



கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தற்போது தொடங்கி நடந்து வரும் நிலையில் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CSEET தேர்வு:

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிகியூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது. ஜூன் 15, 2024 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை 6, 2024-ம் தேதி அன்று தேர்வை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இத்தேர்வுக்கு பதிவு செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள். தேர்வு கூடத்தில் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், பேனா, பென்சில், நோட்புக் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

தேர்தல் பணிக்கு கிளம்பிட்டீங்க போல...இதெல்லாம் எடுத்தாச்சானு ஒரு முறை பார்த்துக்கோங்க..

தேர்தல் பணிக்கு கிளம்பிட்டீங்க போல...இதெல்லாம் எடுத்தாச்சானு ஒரு முறை பார்த்துக்கோங்க..


தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறவாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம் :

1. மாற்று உடைகள் ( தேவையானவை )

2. தேங்காய் எண்ணெய்

3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்

4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்

5. விக்ஸ், தலைவலி தைலம்

6. பிஸ்கட் பாக்கெட்

7. இரண்டு ஸ்கெட்ச்

8. Buds - 2 - ( மை வைக்க )

9. டார்ச் லைட்

10. பெட்ஷீட் / துண்டு

11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)

12. பேனா சிவப்பு & நீலம்

13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )

14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )

15. EDC - படிவம் original. (ஒட்டு போட + Photo )

16. Voter ID / ஆதார் Card.

17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )

18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி ( சாப்பாடு சரி இல்லனா ...)

19. Cell phone + Headphone + Charger

20. flask ( தேவை உள்ளவர்கள்)

21. மிக முக்கியமானது கண் கண்ணாடி

Share:

மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா?

மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதி மறுப்பா?


மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்க மாட்டாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் யாரும் வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைகள், கொண்டாட்டங்களின் போது பெண்கள் மெகந்தி அல்லது மருதாணி போடுவது வழக்கமாக உள்ளது. சில சமூகங்களில் ஆண்களும் மருதாணி இடுகின்றனர். இந்நிலையில், மருதாணி, மெகந்தி போட்டிருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படாது என்ற தகவல் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவியது.

குறிப்பாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பல வாக்காளர்களுக்கும் இந்த தகவல் பரவியதால், வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள், ரசாயனங்களை கொண்டு அவற்றை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இதுகுறித்து, சென்னை தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது,‘‘ இந்த தகவல் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. குறிப்பிட்ட சில சமூகத்தினர் திருமண நிகழ்வுகளின் போது அதிகளவில் மெகந்தி போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், வாக்குச்சாவடியில் பெயர் இருந்தால் யார் வேண்டு மானாலும் வாக்களிக்கலாம்’’ என்றார்.

Share:

4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு 29ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்!

4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு 29ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்!



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு வரும் 29 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை ஆன்லைனில் செய்வதுடன், உயர் கல்வித்துறையின் அரசாணை 247ன் படி விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள படிவத்தில் பணி அனுபவத்திற்கான சான்றிதழைப் பெற்றும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்


தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28ந் தேதி முதல் ஏப்ரல் 29 ந் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன


தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ் மொழியைப் பாடமாக எடுத்துப் படிக்காமல், பிற மொழி எடுத்துப் படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள படிவத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கலை பாடப் பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வு முறை: உயர் கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும்.


தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி ஒன்றில் தமிழ்ப் பாடத்தில் 25 மதிப்பெண்கள் கொள் குறி வகையிலும், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இடம் பெறும். பகுதி இரண்டில் இரண்டு மணி நேரத்திற்கு 50 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். தாள் இரண்டில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நேர்காணல் 30 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.


மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, உயர் கல்வித் துறையின் அரசாணையின்படி, அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கனவே 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்தவர்களும் மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதற்கு ஏற்பத் தான் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் அறிவிப்பிலும் அவர்களுக்குத் தேவையான கூடுதல் தகவல்களைப் பெறும் வகையில் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டமும் https://www.trb.tn.gov.in/syllabus1.php?language=LG-1&status=Active என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000 உதவி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதியதாக 3028 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.


சுமார், 19 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்வதற்காகப் பார்வையிட்டுள்ளனர். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டில் சுமார் 32 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் பேப்பர் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதால், மீண்டும் ஆன்லைன் மூலம் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. புதிய விண்ணப்பத்தில் உள்ளது போல் பணி அனுபவத்திற்கான சான்றிதழ்களைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்

Share: