குரு பெயர்ச்சி பலன்கள் 2024 ... 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 ... 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு 1.5.2024 அன்று குருபகவான், கிருத்திகை நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷம் ராசியில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் 2-ம் பாதம் ரிஷபம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ரிஷபம் குருவின் பகைவீடு. அதேபோல குருவின் விசேஷப் பார்வைகளான 5, 7,9-ம் பார்வைகள் முறையே கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளில் பதிகின்றன. அதோடு கோசார ரீதியாக மீனத்தில் ராகு, கன்னியில் கேது என்ற அமைப்பும், கும்பத்தில் சனி இருக்கும் அமைப்பும் காணப்படுகிறது.


இத்தகைய அமைப்பின் காரணமாக இந்த குரு பெயர்ச்சியினால் உலக அளவில் ஒருவித பரபரப்பான சூழல் காணப்படும். பகை நாடுகளின் அச்சுறுத்தல், பிரபலங்களின் உடல்நலத்தில் குறைபாடுகள் இவை தோன்றினாலும் சரியான நடவடிக்கைகளால் அனைத்தும் சீராகும். உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயரும்.


புதிய கண்டுபிடிப்புகளால் வான் வெளியில் பல அதிசயங்கள் நிகழ்த்தப்படும். கொடுமையான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களின் ஆரோக்யம் பாதுகாக்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை, தெய்வீக நாட்டம், வலைதளங்களில் பகிரப்படும் விஷயங்களின் உண்மையை அறிதல் போன்றவற்றால் அமைதி நிலவும். மகான்கள் வழிபாடு, முதியோரை மதித்தல் போன்ற செயல்களால் இந்த குரு பெயர்ச்சி எல்லோருக்கும் நன்மை தருவதாக அமையும். தற்போது ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ள 12 ராசிக்கான பலன்களை பார்க்கலாம்.மேஷம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்திற்குச் செல்கிறார். இதனால் உங்கள் வாக்கின் செல்வாக்கு அதிகரிக்கும். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 6,8,10-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் எதிரிகள் பயம் நீங்கும். ஆயுள் ஆரோக்யம் சீராகும், பணி, தொழிலமைப்பில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாகும். அலுவலகத்தில் உங்கள் பெருமை பேசப்படும். மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும். பதவி, பொறுப்புகள் அதிகரித்து மகிழ்ச்சி சேர்க்கும். பேச்சுக்கு மதிப்பு கூடும். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். பணவரவு சீராகும். பழைய கடன்கள் சுலபமாக அடைபடும். வாரிசுகளால் பெருமை உண்டாகும். வீடு, வாகன யோகம் உண்டாகும்.


வர்த்தகத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசாங்கப் பணிபுரிபவர்கள் திறமைக்கு உரிய ஏற்றம் பெறுவீர்கள். அரசியலில் உள்ளோரின் செல்வாக்கு அதிகரிக்கும். எந்த சமயத்திலும் வாக்குறுதிகளை யோசித்துச் சொல்லுங்கள். மாணவர்கள் சோம்பலை உதறூங்கள். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் உண்டு.சினிமா, இசை, படைப்புத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். பயணம் செல்லும்போது வேகத்தைத் தவிருங்கள். அடிவயிறு, முதுகு, அஜீரணம், நரம்பு உபாதைகள் வரலாம். பிள்ளையார் வழிபாடும், பெருமாள் ஆராதனையும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.


ரிஷபம்:


தற்போதைய பெயர்ச்சியில் குருவானவர், உங்கள் ராசிக்கு அதாவது ஜன்ம ராசியான ரிஷபத்திற்கு வருகிறார். இது ஜன்ம குரு காலம் என்று யாராவது அச்சுறுத்தினால் பயப்பட வேண்டாம். அவரது விசேஷ பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 5,7,9-ம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால், பூர்வ புண்ணிய பலம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகள் சேரும். அதேசமயம் விட்டுக் கொடுத்தலும், வீண் ரோஷம் தவிர்ப்பதும் முக்கியமாகும். அலுவலகத்தில் நீங்கள் திறமையால் முன்னேற்றங்களைக் காணலாம். உயரதிகாரிகளிடம் பேசும்போது தர்க்கத்தைவிட தன்னடக்கமே நல்லது. பிறர் குறையை பெரிதுபடுத்துவதைத் தவிருங்கள். எதிர்பார்த்த பதவி, இடமாற்றம் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுமுகமான போக்கு நிலவும். இந்த சமயத்தில் வேண்டாத ரோஷம் பெரும் சங்கடத்தை உருவாக்கிவிடலாம். வரவை சேமிக்கப் பழகுங்கள்.


சுபகாரியங்களில் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகலைக் கேளுங்கள். பிறமொழி நபர்களிடம் கவனமா பழகுங்கள். தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தத்தில் அவசரம் வேண்டாம். நடைமுறை சட்டங்களில் கவனமாக இருங்கள். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு கூடும். கர்ப்பிணிகள் கவனமாக இருங்கள். அரசியலில் இருப்போர் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. அரசாங்க ஊழியர்கள் வளர்ச்சி அதிகரிக்கும். கையெழுத்திடுகையில் கவனமாக இருங்கள்.படிப்பில் கவனச் சிதறலைத் தவிருங்கள். சினிமா, கலைத்துறையினர் ரகசியங்களைப் பொது இடத்தில் பகிர வேண்டாம்.கழுத்து,மூட்டு, ரத்த அழுத்த மாற்றம், அலர்ஜி உபாதைகள் வரலாம். வாகனப்பழுதை உடன் சீர் செய்யுங்கள். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு வாழ்வை செழிக்க வைக்கும்.

மிதுனம்:


இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்துக்கு வருகிறார், குருபகவான். இந்த அமைப்பில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு 4,6,8-ம் இடங்களில் பதிகின்றன. இதனால் உங்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கும்,மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அதேசமயம் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றம் உறுதியாகும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கையெழுத்திடும் சமயங்களில் கவனமாக இருங்கள். எதிர்பாராத வெளிநாட்டு வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றிடுங்கள். பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச் சிதறல் கூடாது. வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணையால் சீரான நன்மைகள் கிட்டும். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கடன் தருவது, பெறுவதை உடனுக்குடன் எழுதி வையுங்கள். பெண்கள் சமையலறையில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியிடத்தில் பேசவேண்டாம்.


தொழிலமைப்பில் லாபம் சீராகும்.பணிபுரியும் யாரிடமும் வீண் தகராறு வேண்டாம். ரசாயனத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதே நல்லது. சிலருக்கு திடீர் பதவி, பொறுப்புக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கப் பணியில் உள்ளோர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள்.மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். கலைஞர்கள், சினிமாத்துறையினர் வாய்ப்புகளை வரிசையாகப் பெறுவீர்கள். பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. காது, மூக்கு, தொண்டை, அல்சர் உபாதைகள் வரலாம். மதுரை மீனாட்சி, முக்குறுணி விநாயகர் வழிபாடு விசேஷ நன்மை தரும்.கடகம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்துக்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே மூன்று, ஐந்து, ஏழாம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பினால் உங்கள் சகோதர ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானங்கள் விசேஷ நன்மை பெறுகின்றன. இதனால், வீடு, வாகனம் சேரும், பழைய வழக்குகள் சுமுகமாகத் தீர்வாகும். தம்பதியரிடையே இருந்த விரிசல்கள் நீங்கும். என்றாலும் தேவையற்ற தர்க்கம் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிட வேண்டாம். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்புகள் வரும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் பொறுமைக்குப் பரிசாகக் கிட்டும்.சிம்மம்:


குருபகவான், இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே இரண்டு, நான்கு, ஆறாம் இடத்தில் பதிகின்றன. இதனால் உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பூர்வீகப் பிரச்னைகள் தீரும்.தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். அனுபவம் மிக்கவர்கள் வார்த்தைகளை அவசியம் கேளுங்கள். வெளியூர் செல்லும் சமயத்தில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பொறுப்புகளில் நேரடி கவனம் செலுத்துங்கள். இல்லத்தில் இன்சொல் பேசுங்கள்.


வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியத்தடைகள் நீங்கும். தேவையற்ற கட்ன் பெறவோ தரவொ வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்கள் அமைதியால் அதிக நன்மைகளைப் பெறலாம். அசையும் அசையா சொத்து சேரும். செய்யும் தொழிலில் பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் வளர்ச்சி சீராகும். செல்லும் நாடுகளின் சட்டதிட்டங்களை மதியுங்கள். அரசியலில் உள்ளவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அரசாங்கப் பணிபுரிவோர் மேலான நன்மைகளைப் பெறுவர். சினிமா, கலைத்துறையினர் வாய்ப்புகளை தொடர்ச்சியாகப் பெறுவீர்கள். எதிர்பாலரிடம் அதிக நெருக்கம் வேண்டாம். மாணவர்களுக்கு சோம்பல் கூடாது. வாகனப் பழுதில் அலட்சியம் கூடாது. திருவண்ணாமலை சுவாமி, அம்பாள் வழிபாடு சிறப்பான நன்மை தரும்.


கன்னி:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியில் பதிவது சிறப்பு. ஏழாம், ஒன்பதாம் பார்வைகள் முறையே மூன்று, ஐந்தாம் இடத்தில் பதிகின்றன. இதனால், ரத்தபந்தங்களிடையே உங்கள் மதிப்பு உயரும், சுபகாரியத் தடைகள் நீங்கும். தொட்டவை துலங்கும். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். பதவி, பொறுப்புகள் மனம்போல் கைகூடும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடிவரும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும்.உடனிருப்போரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்து சேரும். பழைய கடன்கள் பைசல் ஆகும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. பெண்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.

அக்கம் பக்கத்தினரிடம் வீண் உரசல் தவிருங்கள். ஹார்மோன் குறைபாடுகளில் அலட்சியம் வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். புதிய முயற்சிகள் ஏற்றத்தைத் தரும். அர்சுவழிப் பாராட்டுகள் சிலருக்குக் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அரசுப்பணியில் உள்ளவர்கள் நன்மைகள் அதிகரிக்கப் பெறுவீர்கள். மாணவர்கள் இரவில் வெகு நேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கணிசமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். செல்லும் இடத்தின் சட்டங்களை மதியுங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். தலை, முதுகு, கழிவு உறுப்பு, ரத்தத் தொற்று உபாதைகள் வரலாம். நரசிம்மர், பைரவர் வழிபாடு நன்மைகள் பல சேர்க்கும்.

துலாம்:


தற்போதைய பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பர்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பன்னிரண்டு, இரண்டு, நான்காம் இடங்களில் பதிவது சிறப்பு. இந்த அமைப்பின் காரணமாக உங்கள் முயற்சிகள் பலிதமாகும், வாக்கில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ப உயர்வுகள் வரும். தேவையற்ற வாக்குவாதம் எவருடனும் வேண்டாம். பதவி, ஊதியம் உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வரும். சிலருக்கு புதிய பணி வாய்ப்பு வரலாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு தடைப்பட்டால் தளரவேண்டாம், அது நன்மைக்கே. வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள். உறவுகள் யாரிடமும் வீண் உரசல் வேண்டாம். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. விடுபட்ட முன்னோர் கடன்களை அவசியம் நிறைவேற்றுங்கள். பெண்கள் திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். பிறமொழி மனிதர்களிடம் அதிக நெருக்கம் தவிருங்கள்.


தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். அது தொடர்ச்சியாக இருக்க உழைப்பு மிக முக்கியம். தேவையற்ற வங்கிக் கடன்களைத் தவிருங்கள். அரசியலில் உள்ளவர்கள் முகஸ்துதி நபர்களை ஒதுக்குவது முக்கியம். பொது இடத்தில் வாக்குறுதிகளைத் தவிருங்கள். அரசுப்பணியில் உள்ளோர், நிதானமாகச் செயல்படுவது நல்லது. பணத்தைக் கையாள்வோர் நிதானத்துடன் இருப்பது முக்கியம். கலைஞர்கள், சினிமாத் துறையினர் வாய்ப்புகள் வரப்பெறுவீர்கள். படைப்பு ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம். மாணவர்களுக்கு மதிப்பு உயரும். இரவில் வெளி இடங்களில் தங்க வேண்டாம். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். நரம்பு, எலும்பு, முதுகுத் தண்டுவடம், கண், பற்களில் உபாதை வரலாம். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி வழிபாடு, சகல நன்மையும் தரும்.


விருச்சிகம்:


இந்தப் பெயர்ச்சியில் குரு பகவான், உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகளில் ஏழாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது மிகமிக விசேஷம். அவ்ரது ஐந்து, ஒன்பதாம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பதினொன்று, மூன்றாம் இடங்களில் பதிகின்றன. இது லாபத்தை அதிகரிக்கச் செய்யும், சகோதர வழியில் ஆதாயத்தை ஏற்படுத்தும். பணியிடத்தில் உங்கள் பெருமை உயரும். மேலதிகாரிகள் ஆதரவினால் பதவி,ஊதியம் உயரப்பெறுவீர்கள். உடனிருப்போர் ஆதரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம் கைகூடும். புதிய பணிவாய்ப்பு எதிர்ப்பார்ப்பு போல் கூடிவரும். அயல்நாட்டுப் பயண வாய்ப்பு சிலருக்கு உண்டு. பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயம் தரும். இல்லத்தில் நல்லவை நடக்கத் தொடங்கும். உறவுகளிடையே ஒற்றுமை உருவாகும். இளம்வயதினரின் பலகால கனவுகள் ஈடேறும். உடல்நலத்தில் இருந்த சங்கடங்கள் தீரும்.


ஆடை, ஆபரணம், சொத்து சேரும். மூன்றாம் நபரை குடும்பத்தில் அனுமதிக்க வேண்டாம். தொழிலில் லாபம் சீராக வரத்தொடங்கும். அயல்நாட்டு வர்த்தகம் கைகூடும். யாருடைய கட்டாயத்திற்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்யவேண்டாம். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சிலருக்கு புதிய பதவி, பொறுப்புகளால் பெருமை உண்டாகும். அரசுப்பணி செய்பவர்கள் முன்னேற்றத் தடைகள் நீங்கிடும். பயணத்தில் கோப்புகள் பத்திரம். பெண்களுக்கு பணவரவு அதிகரிக்கும். வாரிசுகளால் பெருமை உண்டு. மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். கலை, படைப்புத் துறையினர் முயற்சிகளால் முன்னேறலாம். பழைய உறவுகளை உதாசீனப்படுத்த வேண்டாம். வாகனம் ஓட்டுவோர்க்கு போதுமான ஓய்வு முக்கியம். தலைவலி, கண்கள், பாதம், இடுப்பு, மூட்டு, உணவு செரியாமை உபாதைகள் வரலாம். முருகன், துர்க்கை வழிபாடு முன்னேற்றம் தரும்.
தனுசு:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு வருகிறார். அவரது சிறப்புப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே பத்து, பன்னிரண்டு, இரண்டாம் இடங்களில் பதிகின்றன. இத்தகைய அமைப்பினால் உங்கள் பணியிடம் மேன்மை பெறும். தொழிலமைப்பு சீராகும். வார்த்தையில் நிதானம் இருந்தால் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் அனுகூல சூழல் நிலவும். எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வு, இடமாற்றம் நிச்சயம் கைகூடும். அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். புதிய பணி கைக்கு எட்டாமல், இருக்கும் பணியை உதற வேண்டாம். மேலதிகாரிகளிடம் பேசும்போது அசட்டுத் துணிச்சலை விட அடக்கமே நல்லது. வீட்டில் விட்டுக்கொடுத்தல் முக்கியம்.


வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அசையும் அசையா சொத்து சேரும். கையிருப்பை ஆடம்பரத்தில் கரைக்க வேண்டாம். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். குழந்தை பாக்யம் வேண்டுவோர் குலதெய்வத்தை வணங்குவது நல்லது. தொழிலில் தொடர்ச்சியாக லாபம் வரும். சட்டப்புறம்பினை கனவிலும் நினைக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துங்கள். அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு அனுகூலமான சூழல் நிலவும். மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். செயல்களில் நிதானம் இருக்கட்டும். அரசுத்துறை சார்ந்த பணியில் உள்ளோர்க்கு ஆதாயங்கள் அதிகரிக்கும். சிலருக்கு பணி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள், யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமை வெளிப்படும் அளவுக்கு வாய்ப்புகள் வரும். வாகனத்தில் வித்தைகாட்டல் வேண்டாம். அடிவயிறு, கீழ் முதுகுத் தண்டுவடம், மன அழுத்த உபாதைகள் வரலாம். ராமர், சீதை, அனுமனை ஆராதிப்பது வாழ்வை இனிமையாக்குமமகரம்:

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வையில் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவது வெகு சிறப்பானது. மற்ற ஐந்து, ஏழாம் பார்வைகள் முறையே உங்கள் ராசிக்கு ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இந்த அமைப்பு உங்களுக்கு சகல விதத்திலும் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும் எனக் காட்டுகிறது. அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மேலதிகாரிகளுடன் கலந்துரையாடும் அளவுக்கு பேசப்படுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். சிலருக்குப் பலகாலக் கனவாக இருந்த பணிவாய்ப்பு தேடிவரும். உடனிருப்போர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது.  வீட்டில் சீரான நன்மைகள் வரத்தொடங்கும். மனம்போல வீடு, மனை, வாகன வசதிகள் உண்டாகும்.


பழைய கடன்கள் பைசலாகும். பணவரவை சேமிக்கப் பழகுவது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அதீத நெருக்கம் வேண்டாம். பெற்றோர் உடல்நலத்தில் கவனம்செலுத்துங்கள். வாரிசுகளிடம் வீண்கண்டிப்பு தவிருங்கள். பெண்களுக்கு திடீர் யோகத்தால் பொருட் சேர்க்கை ஏற்படும். செய்யும் தொழிலில் சேதங்கள் நீங்கி, லாபங்கள் அதிகரிக்கும். பங்குவர்த்தகம், வீடு ,மனை சார்ந்த தொழிலில் சீரான திட்டமிடல் முக்கியம். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீர் பதவி, பொறுப்புகளால் பெருமை சேரும். பிறமொழி மனிதர்களால் ஆதாயம் உண்டு. யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம். அரசுப்பணியில் உள்ளோர் புதிய வாய்ப்புகளால் ஆதாயம் பெறுவீர்கள். எதிர்பால் நட்புகளிடம் நெருக்கம் தவிருங்கள். மாணவர்களுக்கு மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். இரவுப் பயணம் எதையும் தொடங்கும் முன் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். கலைஞர்கள், படைப்பாளிகள் காலம் கனிந்து வாய்ப்புகள் பெறுவீர்கள். நரம்பு, அடிவயிறு, முதுகு, கால்கள், தொடை, இடுப்பு உபாதைகள் வரலாம். விநாயகர், அனுமன் வழிபாடு, விசேஷ நன்மைகள் தரும்.கும்பம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே எட்டு, பத்து, பன்னிரண்டாம் இடங்களில் பதிகின்றன. இதன் காரணமாக உங்கள் உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். இல்லத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். விடியல் வெளிச்சம் வரும்போது அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம்.  குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். வரவை திட்டமிட்டுச் செலவிடுங்கள்.


தொழிலில் மேன்மையும் வளர்ச்சியும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பு கனவிலும் வேண்டாம். அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெறுவீர்கள். சட்டப்புறம்பு சகவாசம் சங்கடம் தரும் உடனே உதறுங்கள். பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். மகப்பேறு அமைய முறையான சிகிச்சைகள் உதவும். மாணவர்கள் மறதியை உடனே விரட்டுங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். வீண் ரோஷம் தவிருங்கள். வாகனத்தில் பழுதிருப்பின் உடனே கவனியுங்கள். ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம். சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார் வழிபாடு சீரான நன்மை தரும்.மீனம்:


இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருகிறார். அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே ஏழு, ஒன்பது, பதினோராம் இடங்களில் பதிகின்றன. இதனால் குடும்பத்தில் அமைதி நிலவும், பூர்வீக சொத்து சேரும், வரவு சீராக இருக்கும். அதேசமயம் எதிலும் தலைகனம் தவிர்ப்பது அவசியம். அலுவலகத்தில் நன்மைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் வீண் தர்க்கம் தவிருங்கள். பிறரைக் குறைகூறுவதும் கூடாது. திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். பதவி, ஊதிய உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் கைகூடும், பொறுமை முக்கியம். புதிய பதவிகளில் அலட்சியம் கூடாது. வீட்டில் ஒற்றுமை இடம்பிடிக்கும். அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளிடம் பழைய கசப்பை பேசுவதைத் தவிருங்கள். வாரிசுகள் வாழ்வில் சுபதடைகள் நீங்கும். வரவு சீரானாலும் செலவுகளும் சேர்ந்து வரும். வீண் ஆடம்பரம் தவிருங்கள். கடன் தருவது, பெறுவதில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம்.


உழைப்புக்கு ஏற்ப உயர்வுகள் கிட்டும். அரசு வழி அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசியலில் இருப்போர்க்கு தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்படும். சகவாச தோஷத்தால் அதை இழக்க நேரிடலாம், கவனம். அரசுப்பணி புரிவோர், திறமைக்கு ஏற்ப உயர்வுகளை பெறுவீர்கள். பணியிடக் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். கலைஞர்களும் படைப்பாளிகளும் சீரான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சின்சியர் செயல்பாடு வளர்ச்சியைத் தொடர்ச்சியாக்கும். மாணவர்கள் எதிர்கால நன்மைக்கு இப்போதே உத்தரவாதம் கிட்டும். பயணப்பாதையில் பிறர் தரும் எதையும் உட்கொள்ள வேண்டாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தாயார், கொடி மர கருடன் வழிபாடு, சிறப்பான நன்மை தரும்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...