4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு 29ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்!

4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு 29ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் தேர்வு வாரியம்!



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 ஆயிரம் உதவி விரிவுரையாளர் பணிக்கு வரும் 29 ந் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பத்தை ஆன்லைனில் செய்வதுடன், உயர் கல்வித்துறையின் அரசாணை 247ன் படி விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள படிவத்தில் பணி அனுபவத்திற்கான சான்றிதழைப் பெற்றும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்


தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மார்ச் 28ந் தேதி முதல் ஏப்ரல் 29 ந் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன


தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ் மொழியைப் பாடமாக எடுத்துப் படிக்காமல், பிற மொழி எடுத்துப் படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள படிவத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


கலை பாடப் பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்வு முறை: உயர் கல்வித் துறை, அரசாணை அடிப்படையில் எழுத்துத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். நேர்முகத் தேர்விற்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. முதுகலை பாடங்களில் இருந்து போட்டி தேர்வு கேள்விகள் இடம் பெறும்.


தாள் ஒன்றில் மூன்று மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில், பகுதி ஒன்றில் தமிழ்ப் பாடத்தில் 25 மதிப்பெண்கள் கொள் குறி வகையிலும், பொது அறிவு 25 மதிப்பெண்கள் என மொத்தம் 50 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் இடம் பெறும். பகுதி இரண்டில் இரண்டு மணி நேரத்திற்கு 50 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். தாள் இரண்டில் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து நேர்காணல் 30 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும்.


மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, உயர் கல்வித் துறையின் அரசாணையின்படி, அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்தப் பணியிடங்களுக்கு ஏற்கனவே 2019ம் ஆண்டில் விண்ணப்பம் செய்தவர்களும் மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதற்கு ஏற்பத் தான் ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் அறிவிப்பிலும் அவர்களுக்குத் தேவையான கூடுதல் தகவல்களைப் பெறும் வகையில் இணைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. போட்டித்தேர்விற்கான பாடத்திட்டமும் https://www.trb.tn.gov.in/syllabus1.php?language=LG-1&status=Active என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4000 உதவி விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு புதியதாக 3028 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.


சுமார், 19 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்வதற்காகப் பார்வையிட்டுள்ளனர். ஏற்கனவே, 2019ஆம் ஆண்டில் சுமார் 32 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் பேப்பர் மூலம் விண்ணப்பம் செய்துள்ளதால், மீண்டும் ஆன்லைன் மூலம் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை. புதிய விண்ணப்பத்தில் உள்ளது போல் பணி அனுபவத்திற்கான சான்றிதழ்களைப் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டியதும் கட்டாயம் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்

Post a Comment

0 Comments