தேசியப் பறவை மயில் - கட்டுரை
மதிப்பீட்டுச் செயல்பாடு
கீழ்க்காணும் குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்தித் தேசியப் பறவை மயில் பற்றி ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதுக.
குறிப்புச் சட்டகம்
முன்னுரை
பொருளுரை
அழகு மயில்
மயிலின் உணவும் உறைவிடமும்
மயிலின் சிறப்பு
முடிவுரை
தேசியப் பறவை மயில்
முன்னுரை
“வானில் மிதக்கும் கருமுகிலின்
வனப்பில் மயங்கி மகிழ்வுடனே
கானில் நின்று நீயாடும்
காட்சி கண்டு வியந்தேனே” என்று வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகில் மயங்கிப் பாடிய புலவர் பலர் உண்டு. கண்ணைக் கவரும் அவ்வண்ணப் பறவை பற்றி மேலும் அறிவோம்! வாருங்கள்!
அழகு மயில்
உலகில் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் காணப்படும் மயில்களில் மூன்று வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் வெள்ளை மயில்கள். ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டு. அழகிய கண்களுடன் தலையில் சிறு கொண்டை காணப்படும். எத்தியோப்பிய மயில்களுக்கு இரட்டைக் கொண்டைகளும் உண்டு. கோழியினப் பறவையான மயில் நீண்ட கழுத்தைக் கொண்டது. நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்களுடன் ஒவ்வொரு அசைவிற்கும் மயில் திரும்பும் அழகே அழகு! கருமேகம் சூழ்ந்து விட்டால் தன் வண்ணத் தோகையை விரித்து ஆடும் மயில். இக்காட்சிக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் எவருமில்லை!
மயிலின் உணவும் உறைவிடமும்
மயில் ஓர் அனைத்துண்ணி ஆகும். தானியங்கள், புழு பூச்சிகள், அத்திப் பழங்கள், கிழங்குகள். தேன். கரையான்கள், தவளைகள், பாம்புகள் என இதன் உணவிற்கு நீண்ட பட்டியல் உண்டு. குறிஞ்சி நிலப் பறவையான மயில் காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் வாழும். மயில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழும். குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வாகனம் மயிலே!
மயிலின் சிறப்பு
அக்காலத்திலேயே சாலமோன் அரசருக்கு இந்திய மன்னர்கள் மயில் தோகையைப் பரிசளித்து இருக்கிறார்கள். திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் மயில் தோகை பற்றிய செய்திகள் உள்ளன. கி.பி 1963இல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. கி.பி1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்டப்படி மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். ஆபத்தைக் கண்டால் அதிக ஒலி எழுப்பும் பறவை மயில் ஆகும். இவ்வொலியை அகவல், ஆலல், ஏங்கல் என்கிறோம்.
முடிவுரை
பண்டைய மன்னர்கள் தங்கள் படைக்கலன்களை அழகுபடுத்தி வைப்பதற்கு மயிற்பீலியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமணர்களும் இந்துக்களும் மயிலையும் மயிற்பீலியையும் கடவுளாக மதித்துப் போற்றுகிறார்கள்.
“இயற்கை அன்னை இப் பெண்கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்
உனக்கோ குறையொன்றில்லாக் கலாப மயிலே
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்”.
- என்கிறார் பாவேந்தன் பாரதிதாசன்.
பல்வேறு சாதி, மதங்கள், இனக்குழுக்கள் வாழும் நம் இந்தியாவின் தேசியப் பறவை பல வண்ணங்கள் கொண்ட மயில் என்பது பொருத்தம் தானே?
Super
ReplyDeleteAuthor name pls
ReplyDeletesuperana katturai . writerku romba nandri
ReplyDelete