செப். 5-இல் தமிழக அரசின் 3 கல்வித் திட்டங்கள் தொடக்க விழா: தில்லி முதல்வர் கேஜரிவால் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப். 5-ஆம் தேதி தொடக்கிவைக்கும் "புதுமைப் பெண்' திட்ட விழாவில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் 26 "தகைசால் பள்ளிகள்' மற்றும் 15 "மாதிரிப் பள்ளிகள்' திட்டத்தை கேஜரிவால் தொடக்கிவைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திட்டத்தை தொடக்கிவைப்பதற்கான அழைப்பிதழை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தில்லிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து வழங்கினார்.

தமழக முதல்வர் சார்பில் வழங்கப்பட்ட இந்த அழைப்பிதழை பெற்றுக் கொண்ட பின்னர், முதல்வர் கேஜரிவால் தனது ட்விட்டர் பதிவில், "தமிழகம் வருமாறு என்னை அழைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. கல்விப் புரட்சியை நோக்கிய பயணத்தில் தமிழக மக்களுடன் இணைவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். செப். 5 -ஆம் தேதி மூன்று முக்கியமான திட்டங்களை நாங்கள் இணைந்து தொடங்குகிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், இது குறித்து தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லிக்கு வந்தபோது தில்லி அரசின் பள்ளிகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை பார்வையிட்டார். தில்லியின் கல்வி மாதிரியில் மிகவும் ஈர்க்கப்பட்டார். அந்த நேரத்தில், மு.க. ஸ்டாலின் தனது மாநிலத்தில் தில்லியைப் போல மாதிரிப் பள்ளிகளை உருவாக்க விரும்புவதாகவும், அவற்றைப் பார்வையிட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வருகை தர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள தில்லி முதல்வர், "அது தனக்கு கெளரவமானது' என்று தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டங்கள் என்ன?


சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் புதுமைப் பெண், தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் ஆகிய மூன்று திட்டங்களுக்கான தொடக்க விழா (செப்.5) நடைபெறவுள்ளது.

அவற்றின் விவரம்:

1. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் படித்த அனைத்து மாணவிகளுக்கும் உயர் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்.

2. சிறந்த பள்ளிகள் - தில்லியை போலவே, தமிழக அரசும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அதிநவீன 26 தகைசால் பள்ளிகளை அறிமுகப்படுத்துகிறது. தொலைநோக்குப் பார்வையுடன் வலுவான அடித்தளத்தையும், கற்றலின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டதாக இந்தப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன.

3. தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 2021, அக்டோபர் மாதம் தொழில்முறை படிப்புகளை வழங்கும் 10 ஸ்டீம் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கலை, மருத்துவம்) மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 15 இடங்களில் ரூ. 125 கோடியில் இந்த மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...