புதுமைப்பெண்’ திட்டம் இன்று தொடக்கம்: முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்பு
அரசுப் பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். விழாவில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பங்கேற்று, 25 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.
ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. சமீபத்தில் இத்திட்டம் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உதவித் திட்டமாக மாற்றப்பட்டது. இத்திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ.698 கோடியை ஒதுக்கியதுடன், வழிகாட்டுதல்களும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், பட்டம், பட்டயம், தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1.000 அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
இத்திட்டத்தில் பயனாளிகளாக சேர, பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்தும் மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 93 ஆயிரம் மாணவிகள் பயன்பெற இருப்பதாக கூறப்படுகிறது.
‘புதுமைப்பெண் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், ஆசிரியர் தினமான இன்று தொடங்கப்படுகிறது.
வடசென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 23 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகளை திறந்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அப்போது, அங்கு டெல்லி அரசால் செயல்படுத்தப்பட்டு வரும்மாதிரிப் பள்ளிகளை பார்வையிட்டார். மாதிரிப் பள்ளிகளின் செயல்பாடுகளை ஸ்டாலினிடம் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் விளக்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்திலும் இதுபோன்ற மாதிரிப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும்,விழாவுக்கு கேஜ்ரிவால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
கேஜ்ரிவாலுக்கு வரவேற்பு
இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்ற பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டெல்லி முதல்வருக்கு முறைப்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை 6.30 மணிக்கே கேஜ்ரிவால் சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக அமைச்சர்கள், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
No comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.