2 பெண் குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்த ஆசிரியர் தம்பதி - பாராட்டு குவிகிறது

கூடலூரில் தனது இரு மகள்களையும் அரசு பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர் தம்பதிகளுக்கு பாராட்டு குவிந்து வருகின்றன.


 நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி ரேவதி. தேவாலா அட்டி அரசுப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களது முதல் பெண் குழந்தை நிகரிலியை கடந்த 2018-19ம் கல்வி ஆண்டில் கூடலூர் துப்புக்குட்டி பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் சேர்த்தனர். தற்போது 4ம் வகுப்பு படித்து வருகிறார்.


இந்நிலையில் நேற்று இவர்களது 2வது மகள் மகிழினியை இதே பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். அப்போது தனியார் பள்ளியில் குழந்தையை சேர்ப்பதற்கு செலவாகும் தொகையில் இப்பள்ளிக்கு ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள நாற்காலி, தண்ணீர் பேரல் ஆகியவற்றை அன்பளிப்பாக வழங்கினர்.  மேலும், வெயில் காலம் தொடங்கியதும் இப்பள்ளி முழுவதும் சுவர்களுக்கு வர்ணம் பூச ஆசிரியர் தம்பதி உறுதி அளித்துள்ளனர். முன்னதாக, தலைமை ஆசிரியருக்கு தட்டில் பழங்கள் வெற்றிலை பாக்கு வைத்து வழங்கப்பட்டு குழந்தைக்கு பள்ளியில் சேர்க்கை நடைபெற்றது.


இப்பள்ளியில் மொத்தம் உள்ள 163 குழந்தைகளும் ஆங்கில வழி கல்வி கற்று வருகின்றனர். ஆனால், தங்களது குழந்தைகள் இருவரையும் தமிழ் வழிக் கல்வியில் சேர்த்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் இவர்கள் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து மற்றவர்களும் தங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க முன்வரும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி போதிக்கப்படுவதை வலியுறுத்தும் வகையிலும் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்துள்ளதாகவும்,


இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் செயல்பட்டால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயரும் என தெரிவித்துள்ளனர். தங்களது இரு குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் இந்த ஆசிரியர் தம்பதிகளுக்கு பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...