இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு..!


நாடு முழுவதும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வு எழுத, 23.82 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2024-25 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 5-ம் தேதி நேரடி முறையில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு, கடந்த பிப்ரவரி 9-ல் தொடங்கி மார்ச் 16-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 23 லட்சத்து 81,833 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதில் 10 லட்சத்து 18,593 மாணவர்கள், 13 லட்சத்து 63,216 மாணவிகள், 24 திருநங்கைகள் அடங்குவர். மாநிலங்கள் வரிசையில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 3 லட்சத்து 39,125 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 55,216 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக என்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளை விட நீட் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 2022-ம் ஆண்டில் 18 லட்சத்து 72,343 பேரும், 2023-ம் ஆண்டில் 20 லட்சத்து 87,449 பேரும் தேர்வெழுத விண்ணப்பித்தனர். நடப்பாண்டு அதைவிட கூடுதலாக 23 லட்சத்து 81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்பு இன்று (மார்ச் 25) முதல் மே 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு முடிந்ததையடுத்து பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் பயிற்சி அளிக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்துக்கு அதிகபட்சம் 40 பேர் இடம்பெறுவர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும். தினமும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். அனைத்து மையங்களிலும் இணையதள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும். பயிற்சியின் போது மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் போக்குவரத்துக் கட்டணம் வழங்கப்படும். வாரந்தோறும் சனிக்கிழமை திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...