TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – முழு விபரம் இதோ?

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – முழு விபரம் இதோ?

தமிழகத்தில் TNPSC நடத்தும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இத்தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் பாடத்திட்டம், கட் ஆஃப் போன்றவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.


TNPSC குரூப்-4 தேர்வு

தமிழகத்தில் அரசு பணிகளில் பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A உள்ளிட்ட 32 வகையான போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் அரசு துறைகளில் 4 ஆம் நிலை பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு மூலமாக பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இந்த குரூப் 4 தேர்வுக்கு தான் அதிக போட்டியாளர்கள் உள்ளனர். ஏனெனில் இத்தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு கல்வித்தகுதி போதுமானது. அத்துடன் இத்தேர்வு ஒரே ஒரு நிலை கொண்ட எழுத்து தேர்வு ஆகும்.


இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டது. அதில் குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் வருகிற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் இதற்கான காலிப்பணியிடங்கள் 5255 -ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதனால் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். மேலும் இத்தேர்வில் கலந்து கொள்ள 18 வயது முதல் 30 வரை உள்ளவராக இருக்க வேண்டும். பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உள்ளது. இந்த வயது வரம்பு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு பொருந்தும்.


அத்துடன் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு பொது பிரிவினர்கள் 21 முதல் 30 வயது உள்ளவராக இருக்க வேண்டும். இதில் பிற வகுப்பினர்கள் 40 வயது வரை உள்ளவராகவும் இருக்கலாம் என்ற சலுகை உண்டு. ஆனால் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. குரூப் 4 தேர்வு 7 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு மூலமாக தேர்ச்சி பெறுபவர்கள் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் போன்ற பணிகளில் பணிபுரிய முடியும்.

தற்போது இத்தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கட் ஆப் மதிப்பெண்கள் பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

TNPSC Group 4 பாடத்திட்டம்

இத்தேர்வில் தமிழ்மொழிப் பாடப்பிரிவில் 100 வினாக்கள் மற்றும் பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்வர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதையடுத்து 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படுகிறது . இதில் 75- வினாக்கள் பொது அறிவு மற்றும் 25-வினாக்கள் திறனறி தேர்வு கேட்கப்படுகிறது,

பொது அறிவு பகுதியில் கீழ் உள்ள தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது.

அறிவியல்: இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல்

நடப்பு நிகழ்வுகள்: வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், அறிவியல்.

புவியியல்: புவி மற்றும் பிரபஞ்சம், சூரிய குடும்பம், பருவகாற்றுகள், வானிலை, நீர் ஆதாரங்கள், மண், கனிம வளங்கள், காடுகள், வன உயிரினங்கள்.

வரலாறு: சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், டில்லி சுல்தான், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜய நகர மற்றும் பாமினி அரசுகள்

தென்னிந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் பண்பாடு.

இந்திய அரசியல்: அரசியலமைப்பு, முகவுரை, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், குடியுரிமை, கடமைகள் மற்றும் உரிமைகள், ஒன்றிய மற்றும் மாநில நிர்வாகம், பாராளுமன்றம், பஞ்சாயத்து ராஜ்.

பொருளாதாரம்: ஐந்தாண்டு திட்டங்கள், நிலச்சீர்திருத்தம், வேளான் மற்றும் வணிக வளர்ச்சி.

இந்திய தேசிய இயக்கம்: தேசிய எழுச்சி, விடுதலைப் போராட்டத்தில் காந்தி, நேரு, தாகூர், ராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பல தலைவர்களின் பங்கு.

திறனறி வினாக்கள்: தர்க்க அறிவு மற்றும் கணிதத்தைக் கொண்டது. இதில் சுருக்குதல், எண்ணியல், கூட்டுத்தொடர் மற்றும் பெருக்குத்தொடர், சராசரி, சதவீதம், விகிதம் மற்றும் விகித சமம், மீ.பெ.வ, மீ.சி.ம , தனிவட்டி, கூட்டுவட்டி , அளவியல் பாடங்களில் பரப்பளவு மற்றும் கன அளவு , வேலை மற்றும் நேரம் , வேலை மற்றும் தூரம், வயது கணக்குகள் , இலாபம் மற்றும் நட்டம், வடிவியல், இயற்கணிதம் போன்ற தலைப்புகளில் இருந்து கேட்கப்படுகிறது.

கட் ஆஃப் மதிப்பெண்கள்


குரூப் 4 தேர்வை மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். ஆனால் வேலை கிடைக்க வேண்டுமென்றால் காலியிடங்களின் எண்ணிக்கைக்குள் வரும் அளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதன்படி கடந்த ஆண்டுகளில் பொதுப் பிரிவில் 164 வினாக்கள் சரியாக எழுதியவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. அதனால் 165 வினாக்களுக்கு மேல் சரியாக இருந்தால் வேலை கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும் இன ரீதியான பிரிவு வாரியாக இந்த கட் ஆஃப் மதிப்பெண் ஏற்ற இறக்கங்கள் கொண்டு இருக்கும். இதனால் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே குரூப்-4 தேர்வில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...