TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு - TNPSC இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு

TNPSC குரூப் 4 தேர்வில் முறைகேடு - TNPSC இன்று அவசர ஆலோசனை - முக்கிய அறிவிப்பு வெளியாகும்!




டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், குரூப் - 4 தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் குரூப் -4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

குரூப் -4 தேர்வில் முறைகேடு:?

ஆனால் 8 மாதங்களுக்கு பின்னரும் முடிவுகள் வெளியாகவில்லை. இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை 7,381ல் இருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில், மார்ச் 24ஆம் குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதனிடையே குரூப் - 4 தேர்வை ஒரே மையத்தில் எழுதிய 2 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றதால், தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

சட்டசபையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்:

அதுமட்டுமல்லாமல் குரூப் - 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் லட்சக்கணக்கானவர்கள் தங்களது முடிவுகளை அறிய முடியவில்லை என்று புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் விளக்கமளித்தார். அதில், காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது; இதுகுறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

TNPSC விளக்கம்:

அதேபோல் தேர்வு முடிவுகள் வெளியாகாதவர்களுக்கு, டிஎன்பிஎஸ்சி சார்பாக விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டது. அதில் தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்றும், குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் தகுதித் தேர்வில் தேர்சி பெறாததால் பலரின் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று காலை நடக்கவுள்ளது. டிஎன்பிஎஸ்சி தற்காலிக தலைவர் தலைமையில் நடக்கவுள்ள அவசர ஆலோசனை கூட்டத்தில், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்திற்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Post a Comment

0 Comments