அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை 15 ஆயிரம்!


தி.மு.க., ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் முடியும் நிலையில், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பட்டதாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லுாரிகளில், ஆ.சிரியர் பணி நியமனங்களுக்கு, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், போட்டித் தேர்வு நடத்தப்படும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 7ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால், இதுவரை அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கான ஆசிரியர் பணிகளுக்கு, புதிய நியமனங்களை மேற்கொள்ளவில்லை.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிட்ட, வருடாந்திர பணி நியமன நடவடிக்கை குறித்த நாட்காட்டியில் அறிவித்த எந்த தேர்வும் நடத்தப்படவில்லை.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லுாரிகளுக்கும் உதவி பேராசிரியர்களை நியமிக்க, 4,000 பணியிடங்களுக்கு, ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சொன்னபடி நடத்தவில்லை.

வட்டார கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பு, பிப்ரவரியில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது; அதுவும் நடக்கவில்லை.

விரிவுரையாளர் பணிக்கு, ஆகஸ்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு அறிவிக்கையும், வேறு முன்னேற்றமின்றி அப்படியே முடங்கி விட்டது.

கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு, 155 விரிவுரையாளர்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 1,874; இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 3,987 காலியிடங்களுக்கான தேர்வையும் நடத்தவில்லை.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி, கலை, அறிவியல் கல்லுாரி பேராசிரியர், இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி என, மொத்தம், 10 ஆயிரத்து, 371 காலியிடங்களுக்கு, தேர்வு நடத்தும் அறிவிப்பு கிடப்பிலேயே உள்ளதாக, பட்டதாரிகள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் உரிய விசாரணை நடத்த, அரசின் பள்ளி, கல்லுாரிகளில் தரமான கல்வியை வழங்கும் வகையில், ஆசிரியர் காலியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். இதற்கான போட்டித்தேர்வுகளை, இந்த மாதமே அறிவிக்க வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை

ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மட்டும், தொடக்கப் பள்ளிகளில், 4,989 இடைநிலை ஆசிரியர்; 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்த, 5,154 பட்டதாரி ஆசிரியர்; பிளஸ் 2 வரை பாடம் நடத்த, 3,188 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.மொத்தம், 13 ஆயிரத்து 331 இடங்கள் ஏற்கனவே காலியாக உள்ளன. இத்துடன், இந்த மாதம், 31ம் தேதியுடன், ஏராளமான ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவர்களையும் சேர்த்தால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, 15 ஆயிரத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...