பிளஸ் 2 கணிதத் தேர்வில்ஆசிரியர் உதவியுடன் விடை எழுதிய,34 மாணவர்கள் தோல்வி என அறிவிப்பு..!!

பிளஸ் 2 கணிதத் தேர்வில்ஆசிரியர் உதவியுடன் விடை எழுதிய,34 மாணவர்கள் தோல்வி என அறிவிப்பு..!!

பிளஸ் 2 கணிதத் தேர்வில் ஆசிரியர் உதவியுடன் விடை எழுதியதாக எழுந்த விவகாரத்தில், உதகையில் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 34 மாணவர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த மார்ச் 27-ம் தேதி நடந்த பிளஸ் 2 கணித தேர்வில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் விடை எழுத உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்

இதுதொடர்பாக அறை கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்த ராம்கி, மூர்த்தி, முதன்மை கண்காணிப்பாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன், வழித்தட அலுவலர் சீனிவாசன் மற்றும் செந்தில் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில், சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய 34 மாணவ, மாணவிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 34 மாணவர்களும் கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியை நேறறு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும்போது, "இந்த தேர்வில் 2 மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உதவினர். அவர்களை மட்டும் இந்த விஷயத்தில் கொண்டு வராமல், மற்ற அனைவரையும் ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்துவிட்டதாக அறிவித்தது அதிர்ச்சியளிக்கிறது. இதில், ஒரு மாணவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். மற்றொரு மாணவர் ஜேஇஇ தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர்கள் உட்பட மற்ற 32 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது" என்றனர்.

அச்சப்பட வேண்டாம்: இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி ஆகியோர் தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள், சாம்ராஜ் அரசு உதவிபெறும் பள்ளிக்கு நேற்று சென்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியசாமி கூறும்போது, "தேர்வு எழுதிய 34 மாணவர்கள், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர், தற்போதைய தலைமை ஆசிரியர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கை சென்னையில் உள்ள தேர்வுத் துறைக்கு கொண்டு செல்லப்படும். சர்ச்சைக்குரிய 2 மாணவர்களை தவிர, மற்ற 32 மாணவர்களுக்கு கணித பாடத்தில் மதிப்பெண் வழங்குவது குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும். எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...