அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல!மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்!

அரசுப்பள்ளிகள் சந்தை மடங்களும் அல்ல!மாணவர்கள் சோதனைக்கூட எலிகளும் அல்லர்!


அண்மையில் ஓர் ஆசிரியர் தன்னார்வலர் தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காணப்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் குறைந்த மதிப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கப் போவதாகவும் அதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட கூகுள் படிவத்தை நிரப்பி அனுப்பி வைத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்ட செய்தி பல்வேறு கல்வி சார்ந்த புலனக் குழுக்களில் (WhatsApp groups) பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில் பல்வேறு அதிதன்னார்வ ஆசிரியர்கள் பலரும் விடுபட்டுள்ள எங்கள் மாவட்டம் மற்றும் எங்கள் பள்ளிக்கு 9 & 10 ஆம் வகுப்பு போதிக்க அரசு நியமிக்கவிருக்கும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்னர் தனிநபர் முயற்சியில் தன்னார்வ தற்காலிக ஆசிரியர் நியமிக்கும் அறிவிப்பிற்கு முட்டிமோதிக் கொண்டிருக்கும் அவலநிலை சகிப்பதற்கில்லை. முதற்கட்டமாக மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முதல் முன்னுரிமை தனிநபர் அறிவிக்கையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற நபர்களின் இத்தகைய முயற்சிகள் நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படுமேயானால் எதிர்காலத்தில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களும் அதற்கான வேலைவாய்ப்புகளும் கேள்விக்கும் கேலிக்கும் உரியதாகி விடக்கூடும். பணம் படைத்தவர்கள் அல்லது கிடைப்பவர்கள் அரசுப் பள்ளிகளில் எதையும் சாதித்துக் கொள்ளலாம் அல்லது நிகழ்த்திக் கொள்ளலாம் என்ற மனநிலையில்  ஊடுருவல் மேற்கொள்வது அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


ஆண்டுதோறும் தமிழக நிதிநிலை அறிக்கையில் அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மற்றும் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கு இதுபோன்ற நடவடிக்கை முட்டுக்கட்டை போட முயற்சிக்காது என்பது கேள்விக்குறியே. மேலும், பல்வேறு உடல் மற்றும் உள சிக்கல்கள் நிறைந்த இன்றைய பதின்பருவ வயதினரைத் திறம்படக் கையாள்வதில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் பள்ளிக்கல்வித் துறையும் அதன்கீழ் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களும் விழிபிதுங்கிக் கிடக்கும் இச்சூழலில் இதுபோன்ற ஓரிரு மாதங்கள் மட்டுமே தன்னார்வ ஆசிரியப் பணியில் பணிபுரிவோர் நிலையை என்னவென்பது? 


இதுதவிர, தனிநபர் தன்னார்வ ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் மாணவர்கள் ஆகிய இருவரின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பேற்பது? இது ஏதோ ஒருவர் அல்லது இருவர் பிரச்சினை என்று புறந்தள்ள முடியாது. நியமனம் செய்யவிருக்கும் சுமார் 1500 நபர்கள் சார்ந்த அவர்களின்கீழ் கல்வி பயிலவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்ந்த கல்விச் சிக்கல்களையும் தமிழ்நாடு அரசு மிகுந்த கவனத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது உள்ளது. 


குச்சியையும் சாக்கட்டியையும் கையில் எடுத்தவர்கள் எல்லாம் ஆசிரியராகி விட முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் அது வெகு இயல்பாக நடந்தேறி வருகிறது. இவர் பள்ளியில் மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார். அவர் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி போதித்தார் என்று ஊடகங்கள் வழி நிறைய காட்சிகள் அரங்கேறி வருவது அறிந்ததே. அதேவேளையில் ஊடக கவனம் மற்றும் வெளிச்ச விரும்பிகள் தம் இருக்கையை ஒருநாள் விட்டுக் கொடுத்து பெருமிதப்படும் அலப்பறைகளும் கண்டு வாய்பிளந்த கொடுமைகளும் நிறைய உண்டு. போதிப்பதற்கும் கற்பிப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்புத்தகத்தை எடுத்து வாசிப்பதும் விளக்குவதும் ஒருபோதும் நல்ல கற்பித்தல் ஆகாது. குழந்தை உளவியல் அடிப்படையில் நீடித்த நிலைத்த கற்றலைக் குழந்தைகள் அறியாமலேயே மெல்ல மெல்ல மலரச் செய்வதுதான் உண்மையான கற்பித்தல் ஆகும். போதனையில் இயல்புநிலை அகன்று இயந்திர நிலையே கோலோச்சும். தற்காலிக கற்றல் பாவனை தான் அதில் எஞ்சும்.


இதுநாள்வரை எந்த ஓர் ஆசிரியரும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மருத்துவர், பொறியாளர், கல்வி மற்றும் வளர்ச்சி அலுவலராக அதிகாரத்தை ஒரு விநாடி கூட கையிலெடுத்தது இல்லை. அதேவேளையில், தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரராக ஆகிவிடுவது போன்ற கொடுமைகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே நிகழ்த்திக் காட்டப்படுகிறது. எவராவது தனியார் பள்ளிகளில் ஒரு விநாடி ஆசிரியராக ஏன் ஒருபோதும் இருக்க முடிவதில்லை என்பது சிந்திக்கத்தக்கது. ஆளாளுக்கு அரங்கேற்றம் செய்ய அரசுப் பள்ளிகள் ஒன்றும் சந்தை மடங்கள் அல்ல. அதுபோல், ஏழை, எளிய, அடித்தட்டு, பாமர மக்களின் குழந்தைகள் சோதனைக்கூட எலிகளும் அல்லர். உயிர் காக்கும் மருத்துவர் பணியைவிட உயர்ந்த உயரிய உன்னத பணி ஆசிரியர் பணியாகும் என்பதை எல்லோரும் மனத்தில் இருத்திக் கொள்வது அவசியமாகும்.


இத்தகைய சூழலில் இதுபோன்ற தனிநபர் தன்னார்வ தற்காலிக ஆசிரியர் நியமன முன்னெடுப்புகளை தமிழக அரசு முளையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் விரும்பத்தகாத, மாநில கல்விக் கொள்கைக்கெதிரான சமூக விரோத, கேடு விளைவிக்கும் நாசகார கும்பல் அரசுப் பள்ளிகளில் ஊடுருவி கல்வி மற்றும் மாணவர் மனங்களில் நஞ்சை விதைக்கும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வழியற்றுப் போகும். இதேநிலை அரசுப் பள்ளிகளில் தொடருமேயானால் நிரந்தர கூடாரத்திற்குள் புகுந்த தற்காலிக ஒட்டகம் கதையாகிவிடும் என்பதை ஆசிரியர்களும் ஆசிரியர் இயக்கங்களும் உணர்ந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். அரசுப் பள்ளிகள் நம் பள்ளிகள்; நம் பெருமை என்பதை அரசும் மனதார நினைக்க வேண்டும். அவ்வப்போது ஏற்படும் நிரந்தர காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரந்தர பணியிடங்களாகவே தொடர புதிய பணிநியமனங்கள் உருவாக்கப்படுதல் நல்லது. யார் யாரோ தத்தெடுக்க அரசுப் பள்ளிகள் யாருமற்ற அநாதைக் கூடங்கள் அல்ல. அவற்றிற்கு தமிழ்நாடு அரசு எனும் பெற்ற தாயுண்டு. பள்ளிக்கல்வித்துறை என்னும் பாதுகாப்பான வீடுமுண்டு. நினைவில் கொள்வீர்!

முனைவர் மணி கணேசன்

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...