திருக்குறள் பாடல் : 21
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
- தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.
திருக்குறள் பாடல் : 22
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
- ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.
திருக்குறள் பாடல் : 23
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
- இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.
திருக்குறள் பாடல் : 24
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.
- மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.
திருக்குறள் பாடல் : 25
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
- அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
திருக்குறள் பாடல் : 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
- பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.
திருக்குறள் பாடல் : 27
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.
திருக்குறள் பாடல் : 28
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
- நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
திருக்குறள் பாடல் : 29
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
- நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
திருக்குறள் பாடல் : 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
- எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.