டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப் 4க்கான (Group IV) தகுதித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த தேர்வுகளில் அதிக அளவில் ஊரகப்பகுதி மாணவர்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற வசதிவாய்ப்பற்ற மாணவர்கள் கலந்துக்கொண்டு தேர்ச்சி பெறும் வகையில் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியில் இணையத் தள பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டு, சீரிய முறையிலும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டும் இணைய வழிப்பயிற்சி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
எனவே, தகுதி வாய்ந்த அனைவரும், தங்களிடமுள்ள செல்போன் (Smart Phone) வாயிலாக இந்த இணைய வழி வகுப்புகள் மூலம் இலவசமாக பாடங்களைக் கற்று தகுதித்தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி II மற்றும் IIA மற்றும் தொகுதி I பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லூரியின் இணைய வழி வகுப்புகளாக நடைபெற்று வருகிறது. இதனை பயன்படுத்தி அதிகளவிலான கிராமப்புற மற்றும் எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த தொகுதி IVக்கான பயிற்சி வகுப்புகள் 13.11.2023 முதல் தொடங்கப்பட்டு AIM TN வலைதள பக்கத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது. சிறந்த பாட வல்லுனர்களைக்கொண்டும், பாடத் திட்டங்களை தொகுதி வாரியாக வடிவமைத்தும், நெறிப்படுத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்தப்படும். ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மாதிரி வினாத்தாள் வெளியிடப்பட்டு மாதிரி தேர்வு நடத்தி அதனை மதிப்பீடு செய்து முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரலை மூலம் வினாத்தாள் குறித்த விவாதம் நடைபெறும். இதன்மூலம் மாணாக்கர்கள் தவறுகளை களையவும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும் இயலும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி IV தேர்வினை முனைப்புடன் எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் AIM TN(YouTube channel) மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.