வேளாண் பல்கலை இடஒதுக்கீடு கலந்தாய்வு மீண்டும் ஒத்திவைப்பு..!!

வேளாண் பல்கலை இடஒதுக்கீடு கலந்தாய்வு மீண்டும் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நேற்று நடைபெற இருந்த 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு மாணவர்கள் உள்ளிட்ட சிறப்பு கலந்தாய்வு முடிந்த நிலையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவின் கீழ் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 12ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கலந்தாய்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு 17ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு 19ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை.

வேளாண் பல்கலையின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 408 இடங்கள் உள்ளன. 7000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்துள்ள மாணவர்களில் சிலர் ஆறு முதல் பிளஸ்2 வரை அரசு பள்ளியில் படித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அளித்த பட்டியலில் முரண்பாடு உள்ளதால் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் எமிஸ். பதிவு எண்ணை வைத்து பட்டியல் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குழப்பம் எழுந்துள்ளதால் அனைத்து விண்ணப்பங்களையும் மீண்டும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வேளாண் பல்கலை கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளர் டீன் பழனிசாமியிடம் கேட்டபோது ''தொழில்முறை பாடப்பிரிவினருக்கும் பொது பிரிவுக்கும் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் எழவில்லை.இம்மாணவர்கள் தாராளமாக பொதுக்கலந்தாய்வில் பங்கேற்று கல்லுாரி பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். விரைவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு சான்றிதழ் சரிபார்ப்பு செயல்பாடுகள் நிறைவு பெறும்'' என்றார்


Post a Comment

0 Comments